ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்கள் ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையிலேயே, ”தமிழ் மக்கள் சிங்கள மொழியைப் படித்து தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள் வெறுப்புக்கள் புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படும். எப்பொழுதும் பன்மொழி பல்மதத் தேர்ச்சி நன்மை அளிக்கவல்லன.
இன்றைய காலகட்டத்தில் நாங்கள் தமிழையும் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை எதிர்பார்ப்புக்களை தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கும்.
வெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் அவை இங்கேயே தேங்கியிருப்பன. அதனால் சிங்கள மக்கள் எமது உணர்வுகளையும், தேவைகளையும், அபிலாசைகளையும் நேரடியாக உணராது விட்டு விடுகின்றார்கள்.
இதையறிந்து தான் தெற்கில் பாடசாலை மாணவ மாணவியருக்குத் தமிழ் ஒரு கட்டாய பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது. ஒரே நாட்டிற்குள் எம்முடைய தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் எமது சகோதர மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிக அவசியம்” என்றார்.