இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவருக்கு பிடித்த தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்தும் பக்தர்கள் ‘தஹிகலா’ தயாரிப்பதுண்டு. கிருஷ்ணர் மாடு மேய்க்கும்போது, கோபியர்கள் கொண்டுவரும் சாதங்களையும் கலந்து உண்பார். அதை இன்றும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய், பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.