சர்வதேச ஹாக்கி திட்டத்தை ஏற்கவேண்டும்!இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு காரணமான அக, புற காரணங்களை அலசிய நாம், மீண்டும் அது தனது உன்னத நிலையை எட்டுவதற்கு சாத்தியம் உண்டென்றும், அதற்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் அவசியம் என்பதை கடைசிக் கட்டுரையில் விவாதித்திருந்தோம்.
இந்த நிலையில் இந்திய ஹாக்கியை மேம்படுத்தும் திட்டம் ஒன்றை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது. இந்திய ஹாக்கி கூட்டமைப்பு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கிவரும் நிலையில், அத்திட்டம் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் ரிக் சார்ல்ஸ்வொர்த் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்றப்படும் என்று அழுத்தம் திருத்தமாக சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் தலைவர் பிரீடா விரீஸ்மேன் கூறியுள்ளார்.
இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு, ரிக் சார்ல்ஸ்வொர்த்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து நிறைவேற்றி, அது வெற்றி பெற்றால் மட்டுமே, 2010இல் டெல்லியில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடத்த வேண்டும் என்ற இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்கப்படும் என்றும் விரீஸ்மேன் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னரே இத்திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்த இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டிருந்தால், சிலியில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு சென்ற இந்திய அணியுடன் ஒரு ஆலோசகராக ரிக் சார்ல்ஸ்வொர்த்தும் சென்றிருப்பார், அது இந்திய அணிக்கு வலிமை சேர்த்திருக்கும் என்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் சிலர் கூறுகின்றனர்.
இன்று, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி இழந்துவிட்ட நிலையில், சர்வதேச கூட்டமைப்பின் நெருக்குதலையடுத்து அத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ள இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பு, இந்தியாவின் ஆடவர் ஜூனியர், இந்திய மகளிர் அணிகளை உருவாக்கும் பெறுப்பை ரிக் சார்ல்ஸ்வொர்த்திற்கு வழங்க, அதனை சார்ஸ்வொர்த் நிராகரித்துவிட்டார்!
இந்திய ஹாக்கியை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் தனது பொறுப்பு சுருக்கப்படுவதை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது என்று செய்தியாளர்களிடம் சார்ஸ்வொர்த் கூறியுள்ளார். “இந்திய ஹாக்கி அணியை தவிர்த்துவிட்டு மற்ற பொறுப்பை என்னிடம் அளிப்பது, இத்திட்டத்திற்கு முரணானது, அது வேலைக்கு ஆகாது, அதற்காக நான் இங்கு வரவில்லை” என்று திட்டவட்டமாக்க் கூறிவிட்டார்.
இந்திய ஹாக்கியை தூக்கி நிறுத்த சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள திட்டமும், அதனை நடைமுறைப்படுத்த ரிக் சார்ல்ஸ்வொர்த் வந்துள்ளதும் இந்திய ஹாக்கிக்கு பயனளிக்குமா? மேம்படுத்திட உதவிடுமா? என்று மாநில, தேச அளவுகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாடிய முன்னாள் வீரர்களிடம் கேட்டோம்.
அவர்கள் அனைவரும் அளித்த ஒரே பதில் : அத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்பதே!
அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் :
1) ஹாக்கி விதிமுறைகள் பெரும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்திய வீரர்களை அதற்கேற்றவாறு பயிற்றுவிக்க ரிக் சார்ல்ஸ்வொர்த் போன்ற அனுபவமிக்க வீரர்களின் வழிகாட்டுதலை ஏற்பதில் எந்தத் தவறும் இல்லை.
2) தற்பொழுது ஆடப்படும் நவீன ஹாக்கிக்கு ஏற்றவாறு இன்னமும் நமது நாட்டு வீரர்கள் முழுமையாக தயாராகவில்லை என்பதே உண்மை. இன்னமும் நாம் நீண்ட காலமாக ஆடிவந்த பாரம்பரிய ஹாக்கி விதிமுறைகளில் இருந்து நமது மனம் மாறவில்லை. அந்த ஆட்டமுறையில் பழக்கப்பட்டவர்களே நமது நாட்டின் மூத்த பயிற்சியாளர்களாக உள்ளனர். எனவே அனுபவமிக்க ரிக் சார்ல்ஸ்வொர்த்தின் வழிகாட்டுதல் நமக்கு மிகந்த பயனளிக்கும்.
3) ஐரோப்பிய அணி வீரர்கள் எந்த நிலையிலும் ஆடக்கூடிய வல்லமையை பெறும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ரைட் எக்ஸ்ட்ரீம் ஆடுபவர் திடீரென்று லெப்ஃட் எக்ஸ்ட்ரீம் ஆடுகிறார். நமது வீரர்களோ ஒரே ஒரு நிலையில் மட்டுமே ஆடுகின்றனர். இது ஐரோப்பிய அணிகளின் பலம். இப்படி பல்வேறு நுணுக்கங்களை அவர்கள் கையாளுகின்றனர். இதனை நமது நாட்டு வீரர்கள், குறிப்பாக இளைய நிலை விரர்கள் கற்றுக் கொள்வது இந்திய ஹாக்கியின் எதிர்காலத்திற்கு நன்கு உதவும்.
4) இந்திய ஹாக்கியை மேம்படுத்துவதில் நமது தேச ஹாக்கி கூட்டமைப்பு தவறவிட்ட நிலையில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அளிக்கும் திட்டத்தை ஏற்று செயல்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
5) நமது உடனடித் தேவை வசதிகள். செயற்கை புல் களங்களில் இருந்து மற்ற அடிப்படை வசதிகள் - உதாரணத்திற்கு பயிற்சி முகாம்களுக்கு வரும் வீரர்களுக்கு தங்கும் இடத்திலிருந்து, உணவு, கருவிகள் ஆகியன - கிடைக்க வேண்டும் என்பதே. இவையெல்லாம் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிலையில் இதனை வரவேற்கத்தான் வேண்டும்.
இதுவே ஹாக்கி விளையாட்டு விரும்பிகளின் பரவலான கருத்துமாகும்.
எனவே, இந்திய ஹாக்கி இன்றுள்ள நிலையில் இருந்து மேம்பட (விடுபட) சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் திட்டத்தை ஏற்பதே சிறந்தது என்று ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே இவர்களின் கருத்துகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றுள்ள ஹாக்கி கூட்டமைப்பு நிர்வாகிகளை மாற்றிவிட்டு, அனுபவம் மிக்க முன்னாள் வீரர்களை கொண்ட தற்காலிக அமைப்பை ஏற்படுத்தி, அதனிடம் தேச அளவிலான ஹாக்கி நிர்வாகப் பெறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் திட்டம் நன்கு செயல்படுத்துவதற்கு வழியேற்படும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏற்பாட்டை உடனடியாக மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையும், ஒலிம்பிக் சங்கமும் செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மத்திய அரசும், இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய ஹாக்கிக் கூட்டமைப்புடன் பேசி வருகின்றன. முடிவு நல்லதாகவே அமையும் என்று எதிர்ப்பார்போம்.
நன்றிகள் :
திரு. எட்வர்ட் தாமஸ் (ஜான்) - 1969ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை தமிழக அணிக்காக விளையாடியவர். தற்பொழுது சென்னை ஹாக்கி சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பயிற்சியாளராகவும் உள்ளார்.
திரு. கிருஷ்ணமூர்த்தி - 1969 சென்னை பல்கலைக்கழக அணிக்கு விளையாடியவர். சென்னை ஹாக்கி சங்கத்தின் துணைத் தலைவர்.
திரு. ஜி.பி. ஆனந்தன் - ஹாக்கி கிளாஸ் 1 நடுவராக இருந்தவர். 1970இல் தமிழக அணிக்கு விளையாடியவர். தற்பொழுது வருமான வரித்துறையில் பணியாற்றுகிறார்.
திரு. அருள் குமார் - ஸ்டார் ஆஃப் மன்கி ஹாக்கி கிளப் துணைத் தலைவர்.