ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
, செவ்வாய், 11 மார்ச் 2008 (16:27 IST)
ஹாக்கி விளையாட்டில் பெருமையும் புகழும் பெற்று விளங்கிய காலம் போய் இன்று ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கூட தகுதி பெற முடியாத நிலை இந்திய ஹாக்கி அணிக்கு ஏற்பட்டதற்கு முக்கிய பொறுப்பாளியான இந்திய ஹாக்கி கூட்டமைப்பை முழுமையாக சீர்படுத்திட மத்திய அரசு முன்வரவேண்டும்.இன்று நேற்றல்ல, இந்திய ஹாக்கி அணி நாளுக்கு நாள் திறன் குறைந்து, சர்வதேசப் போட்டிகளில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவரும் நாள் முதல் கடுமையான குற்றச்சாற்றிற்கு ஆளாகிவரும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய முழுப்பொறுப்பு மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு உள்ளது.
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறத் தவறிய நிலையில், நாடாளுமன்றத்தில் அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர், தேச விளையாட்டு கூட்டமைப்புக்களின் செயல்பாட்டில் அரசுகள் தலையிடக் கூடாது என்றுள்ள ஒலிம்பிக் உடன்படிக்கை விதியை சுட்டிக்காட்டியுள்ளார்.ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஏமாற்றமளிக்கிறது, அவமானகரமானது என்று கூறிய அமைச்சர், ஹாக்கி விளையாட்டின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று இந்நாள், முன்னாள் வீரர்கள் குற்றம் சுமத்தும் அதற்கான விளையாட்டுக் கூட்டமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க ஒலிம்பிக் உடன்படிக்கை விதியை சுட்டிக் காட்டுவது பொறுத்தமானதாக இல்லை.ஏனெனில், தேச அளவிலான விளையாட்டு அமைப்பு, ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் வழிகாட்டுதல்களின்படியும் அதன் மேம்பாட்டிற்காகத் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதற்கான சுதந்திரத்தில் அந்நாட்டின் அரசு தலையிட்டு திசை திருப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறு ஒலிம்பிக் விதி கூறப்பட்டுள்ளது. இதனை, ஹாக்கி விளையாட்டை தனது ‘அதி மேதாவித்தனமான நிர்வாகத் திறமையால்’ கெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பை முறைபடுத்துவதற்குத் தடையாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இதனை அமைச்சரும் நன்கு உணர்ந்துள்ளார் என்பது அவர் தெரிவித்த மற்றொரு கருத்து உறுதிப்படுத்துகிறது. “ஒலிம்பிக் உடன்படிக்கையை மதிக்கின்றோம், அதே வேளையில் ஒரு விளையாட்டு அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு அது குறுக்கே நிற்பதாகத் தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.
எனவே, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகத்தில் உடனடியாகத் தலையிட்டு, தலைசிறந்த முன்னாள் வீரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதற்கிணங்க முறைபடுத்த வேண்டும்.
தற்பொழுதுள்ள நிர்வாகத்தை கலைத்துவிட்டு, தற்காலிகமாக ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும். அதன்பிறகு ஒரு நிபுணர் குழுவை அமைத்து இந்திய ஹாக்கியை மீண்டும் அதன் உன்னத நிலைக்கு உயர்த்துவதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே இன்றுள்ள அவசரத் தேவையாகும்.