மரடோனா மீது பாய்கிறது அர்ஜென்டீனா ஊடகங்கள்
, வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (15:48 IST)
கால்பந்தாட்டத்தின் மீது வெறி கொண்ட அர்ஜென்டீனா ரசிகர்கள் மரடோனா பயிற்சியின் கீழ் அர்ஜென்டீனா முதன் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அர்ஜென்டீனா ஊடகங்கள் மரடோனா மீது தாக்குதல் விமர்சனம் வைத்துள்ளது.பராகுவேயிடம் 0- 1 என்று தோல்வி தழுவியதால் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அர்ஜென்டீனா மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெல்வதோடு, மற்ற அணிகள் தோற்க பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது.குறிப்பாக மரடோனா தலைமையில் 6 தகுதிச் சுற்று போட்டிகளில் 4 போட்டிகளில் அர்ஜென்டீனா தோல்வி தழுவியுள்ளது.அர்ஜென்டீன ஊடகங்கள் மரடோனாவின் பயிற்சித் திறனை சாடியுள்ளன. லா நேசியான் என்ற பத்திரிக்கை மரடோனாவின் பிழைகள்தான் தோல்விக்கு காரணம் என்று சாடியுள்ளது.அர்ஜென்டீனாவில் அதிகம் விற்கும் பத்திரிக்கையான க்ளாரினில் ஆழ்ந்த பள்ளத்தின் முனையில் அர்ஜென்டீனா காலபந்து அணி என்று தலைப்பிட்டு, பெரு,உருகுவே அணிக்கு எதிராக மரடோனா தனது திறமையை நிரூபித்தேயாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.மற்றொரு பத்திரிக்கையில் மரடோனா, ஒரு பயிற்சியளராக செய்யக்கூடாத தவறுகளோஐ செய்தார் என்றும், வீரர்களை உற்சாகமிழக்கச்செய்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.ஆனால் இதற்கெல்லாம் அசராத மரடோனா 15 வய்து முதல் இதுபோன்ற விவகாரங்களை பார்த்து வருகிறேன், இப்போது 48 வயதாகிறது என்னால் சமாளிக்க முடியாதா என்ன? என்று கேள்வி எழுப்புகிறார். தோல்விகளுக்கு எந்த ஒரு நியாயமான காரணத்தையும் அவரால் வைக்க முடியவில்லை.மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் டாலர்கள் சம்பளம் வாங்கும் மரடோனாவிற்கு பயிற்சி பற்றி ஒன்றும் தெரியாது என்ற ரீதியில் அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.இதற்கு முன் கிளப் மட்ட பயிற்சியாளராக இருந்தபோது கூட இவரது பயிற்சியின் கீழ் அந்த அணிகள் வெற்றிகளைக் கண்டதில்லை என்று பத்திரிக்கைகள் கூறியுள்ளன.அடிக்கடி வீரர்களை மாற்றுவதும், நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, டெவேஸ் போன்றவர்களை பயன்படுத்தத் தெரியாமலும் மரடோனா உள்ளார் என்று பல முனை தாக்குதல் மரடோனா மீது தொடுக்கப்பட்டுள்ளது.தாக்குதல்களை மீறி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2010 உலகக் கோப்பை கால்பந்திற்கு அர்ஜென்டீனாவை கொண்டு செல்வாரா இந்த 1986 உலகக் கோப்பை மேதை என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.