பிரெஞ்ச் ஓபன்: மீண்டும் ஃபெடரர் – நடால் இறுதிப் போட்டி
, சனி, 4 ஜூன் 2011 (12:11 IST)
விம்பிள்டன் உள்ளிட்ட புல் களங்களில் நடந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அனைத்தையும் வென்றுள்ள உலகின் தலைசிறந்த வீரராகத் திகழும் ரோஜர் ஃபெடரர், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வாகையர் பட்டத்தை இரண்டாவது முறையாக வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.ரோலண்ட் காரோஸில் நேற்று நள்ளிரவு முடிந்த ஆடவர் அரையிறுதிப் போட்டியில், நோவாக் ஜோக்கோவிச்சை 7-6 (7-5), 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட்களில் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் 5 முறை வாகையர் பட்டம் வென்ற ரஃபேல் நடாலை மீண்டும் ஒரு முறை சந்திக்கிறார் ரோஜர் ஃபெடரர்.
உலகில் மிக அதிகமான கிராண்ட் ஸ்லாம் வாகையர் பட்டங்களை - 16ஐ வென்றுள்ள ரோஜர் ஃபெடரருக்கு, பிரெஞ்ச் ஓபன் வாகையர் பட்டத்தை மட்டும் ஒரே ஒரு முறைதான் - அதுவும் ரஃபேல் நடால் காயம் காரணமாக வெளியேறிவிட்ட 2009ஆம் ஆண்டுதான் வென்றுள்ளார். பல முறை ரஃபேல் நடாலுடன் மோதியுள்ளார். ஆனால் தோல்வியைத்தான் தழுவியுள்ளார். இந்த நிலையில் நாளை நடைபெறும் போட்டி, அவருக்கு மிகப் பெரிய வாய்ப்பாகவும், அதே நேரத்தில் சிறப்பாக ஆடிவரும் நடாலை எதிர்கொள்ளும் சவால் நிறைந்த போட்டியாகவும் அமையவுள்ளது. இந்த இரு வீரர்களும் ஆடும் சக்தியில் இருந்து, பரவலாக ஆட்டத்திறன் கொண்டவர்கள். எந்த இடத்திலும் ஆட்டத்தின் போக்கினால் அசராதவர்கள். எதிரியின் எல்லா திறன்களுக்கும் பதிலடி கொடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.இருவருக்குமே சிறப்பான சர்வ் திறன் உண்டு. அதே நேரத்தில் எவ்வளவு வேகத்தில் சர்வ் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வின்னர்களை அடிக்கும் திறன் பெற்றவர்களாகவும் விளங்குகின்றனர். இருவருமே உலகின் தலைசிறந்த பேஸ் லைன் ஆட்டக்காரர்கள். ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குப் பாய்ந்து பந்துகளை எடுப்பதில் அசாதாரண திறன் படைத்தவர்கள். உடல் திறன் ரீதியாகப் பார்த்தால், களைப்பின்றி ஆடக்கூடியவர்கள். களத்திற்கு வெளியே நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் களத்தில் கடும் போட்டியை கொடுப்பவர்கள். அதிருஷ்டம் என்பதை கணக்கில் கொள்ளாமல், ஆட்டத்திறனைக் கொண்டே முடிவை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். இப்படி ஏராளமான சிறப்புகள் கொண்ட இவர்கள் இருவரும், திறன் ரீதியாக சம நிலையில் இருந்தாலும், பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் நடக்கும் களி மண் பூமியில் நடாலின் திறன் என்பது, கடந்த 6 ஆண்டுகளில் தோற்கடிக்க முடியாத திறனாக உள்ளது.எனவே, நாளைய இறுதிப் போட்டி என்பது டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.