நடாலுக்கு 'தண்ணி' காட்டி வீழ்த்திய லுகாஸ் ரசோல் யார்?
, வெள்ளி, 29 ஜூன் 2012 (17:40 IST)
விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் 2005ஆம் ஆண்டிற்குப்பிறகு ஒரு 2ஆம் தரநிலை வீரர் 2வது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது நிகழ்ந்தது. அந்த வீரர் ரஃபேல் நடால், தனது அபாரமான, நம்பமுடியாத ஆட்டத்தினால் நடாலை வீட்டுக்கு அனுப்பியவர் லூகாஸ் ரசோல் என்ற செக்.குடியரசு வீரர்!ரஃபேல் நடாலோ பிரெஞ்ச் ஓபனை சமீபத்தில்தான் 7வது முறையாக வென்று சாதனை படைத்தவர். மேலும் 10க்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். பெடரர், ஜோகோவிச் போன்ற பெருந்தலைகளையே வீழ்த்தியவர்.இப்படியிருக்கும் நடாலை அதிர்ச்சித் தோல்வியுறச்செய்த செக்.குடியரசு வீரர் லூகாஸ் ரசோலை டென்னிஸ் உலகிலேயே யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. இவருக்கும் வயது 26, நடாலுக்கும் வயது 26.லூகாஸ் ரசோல் இதுவரை அதிகபட்சமாக எட்டிய ஏ.டி.பி. தரநிலை 65ஆகும். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக விம்பிள்டன் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்து பிரதான சுற்றுக்குத்தகுதி பெறாமல் போனவர்.இதற்கு முன் எந்த ஒரு டென்னிஸ் தொடரிலும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத ரசோல் நேற்று நடாலை வீழ்த்தியவுடன் உலகப் புகழ் பெற்றுள்ளார். புதிய நாயகன் உதயமாகிவிட்டார் என்ற அளவில் அவரைப் பற்றி புகழ்ந்து பேசப்படுகிறது.ஏனெனில் ஆடிய ஆட்டம் அத்தகையது. பயங்கரமான சர்வ்கள் அதுவும் முதல் சர்வில் சோடைபோகாத துல்லியம், நடாலின் சர்வ்களை ரிடர்ன் எடுத்து அடிப்பதில் மணிக்கு 95 மைல்கள் வேகம் கொண்ட ஷாட், என்று ரசோலின் ஆட்டம் தற்போது அணு அணுவாக ஆராயப்பட்டு வருகிறது.சாம்ப்ராஸ் போன்று நல்ல உயரம், 80கிலோ எடை கொண்டவர் என்று தெரியாத ஒல்லியான உடல்வாகு கொண்ட ரசோல் அடித்த பல ஷாட்கள் நடாலுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.எப்போதும் வெற்றியையே குறிவைத்து ஆடினார் ரசோல். முதல் செட்டில் டை பிரேக்கரில் 9- 11 என்று நடாலை அச்சுறுத்தி இழந்த ரசோல் அதற்கு அடுத்த இரண்டு செட்களில் 6- 4, 6- 4 என்று வெற்றி பெற நடால் ரசோலை திரும்பிப் பார்க்கத் தொடங்கினார். 4
வது செட்டில் நடால் தன் ஆட்டத்தை பல்வேறு விதமாக மற்ற வேண்டியிருந்தது. இதில் 6- 2 என்று நடால் வெற்றிபெற ஆட்டம் 5வது செட்டிற்கு சென்றது. இடையே சிறிது தடங்கல் ஏற்பட்டது.2
வது மற்றும் 3வது செட்களை ரசோல் 34 மற்றும் 37 நிமிடங்களில் கைப்பற்றினார். அவரது சர்வை கடைசி வரை நடாலினால் திருப்திகரமாக திருப்பி எடுக்க முடியவில்லை. சர்வில் அசாதாரணமாக இருந்ததும், நடாலின் சர்வை திருப்பி எடுத்து அதிரடி ஷாட்களை ஆடியடும் நடாலுக்கு சற்றும் எதிர்பாராத ஒரு தோல்வி அச்சத்தை ஏற்படுத்தியது.சில ஷாட்கள் நடால் எட்டக்கூடிய தூரத்தில் சென்றாலும் சென்ற வேகம் பயங்கரம். இதில் நடால் நிலை குலைந்தார். நடால் கைக்கு அருகில் ரசோலின் ஷாட் சென்றாலும் வேகம் நடால் எதிர்பார்க்காத வேகமாகும். மேலும் ரசோல் நல்ல உயரம் என்பதால் அடிக்கும் சர்வ்கள் பிட்ச் ஆகி நடாலின் தோள்பட்டை உயரத்திற்கு எழும்பியது நடாலின் ரிடர்ன்களை வெத்தாக்கியது.இப்போது அடுத்த போட்டியை ரசோல் எப்போது ஆடுவார் என்ற ஆர்வம் டென்னிஸ் உலகில் எழுந்துள்ளது. அடுத்ததாக அவர் ஜெர்மனியின் கால்ஷ்ரெய்பரைச் சந்திக்கிறார். அவரையும் வீழ்த்திவிட்டால் இந்த ரசோல் பட்டம் வெல்லும் வரை செல்வார் என்றே இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.நடாலைப்பொறுத்தவரை தான் கடுமையாக ஏமாற்றமடைந்தேன் என்று கூறியுள்ளார். இது ஏதோ இறுதிப் போட்டியோ, அரையிறுதியோ கிடையாது, 2வது சுற்றில் திடீரென ஒரு உத்வேகமான வீரரை எதிர்கொண்டார் அவரால் இந்தத் திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போனது.ஆனால் தன்ன்டக்கமான ரசோல் என்ன கூறுகிறார் என்றால் ஒருநாளில் நடால் போன்ற மிகப்பெரிய வீரர்களை வெற்றி பெறுவேன் மற்றொரு நாளில் தரநிலையில் 500-இல் உள்ள வீரரிடம் தோல்வி கூட அடைவேன். இது ஒரு கேம் இதில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நான் ரபேல் நடாலுக்காக வருந்துகிறேன். என்றார் ரஸோல்.டென்னிஸ் உலகின் புதிய நாயகன் ரசோலா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.