துபாயில் நடந்த உலக வில் வித்தைப் போட்டியில் மகளிர் தனி நபர் ரீகர்வ் போட்டியில் இந்திய வீராங்கனை டோலா பானர்ஜி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது பெருமைக்குறியது மட்டுமின்றி, இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுவதாகும்.
இது ஒரே இடத்தில் சில சுற்றுகள் நடத்தபட்டு, அதில் அதிர்ஷ்டத்தின் துணையுடன் இறுதிக்குத் தகுதிபெற்று, அதில் எதிர் போட்டியாளர் அன்றைய தினத்தில் சோபிக்காத்தால் கிடைத்த வெற்றியால் டோலா பானர்ஜி சாம்பியனாகி விடவில்லை. இப்போட்டிகளின் துவக்கச் சுற்றுகள் தென் கொரியாவில் துவங்கி, பிறகு துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளில் நடந்துள்ளது. இவற்றிலெல்லாம் வெற்றி பெற்று கடைசியாக துபாயில் நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு டோலா பானர்ஜி தகுதி பெற்றுள்ளார்.
இறுதிச் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீராங்கனையான டோலா பானர்ஜி, ஒவ்வொரு சுற்றிலும் கடுமையான போட்டிகளைச் சந்தித்துள்ளார். அரையிறுதியில் ரஷ்யாவின் நாட்டாலியா எர்டினியீவாவை 108-106 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை யூன் யங் சோய்யின் கடுமையான சவாலை எதிர்கொண்டு 110-109 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சர்வதேச அளவில் நடந்த வில்வித்தைப் போட்டிகளில் டோலா பானர்ஜி பல முறை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்றாலும், உலக அளவில் நமது நாட்டவர் இப்பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்யா, கொரியா போன்ற நாடுகளில் உள்ளது போன்றோ அல்லது அந்நாட்டு அரசுகள் அளிக்கும் உதவிகள் மற்றும் வசதிகளோ இல்லாத, கிட்டாத நமது நாட்டில் இருந்துச் சென்று உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதென்பது நிச்சயம் கற்பனைக்கூட எட்டாத்துதான். அதனை டோலா பானர்ஜி சாதித்துள்ளதுதான் ஆச்சரியப்படவைக்கிறது.
அடுத்த ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் கூடிய வாய்ப்பை டோலா நிச்சயம் பெறுவார். அதுவே தனது குறிக்கோள் என்றும், அதனை நோக்கியே தான் பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் டோலா பானர்ஜி கூறியுள்ளார்.
டோலா பானர்ஜியின் இந்த சாதனை நமது இளைய சமூகத்தினரை நிமிரச் செய்யும் என்பது மட்டுமின்றி, நமக்கு அவருடைய சாதனை கண் திறப்பாகவும் உள்ளது.
மிகக் குறைந்தபட்ச வசதிகளும், ஊக்கமும் மட்டுமே கிடைக்கும் நிலையில் கடுமையான பயற்சியால் இந்த அளவிற்கு உயர முடியுமெனில், அதி நவீன வசதிகளும், அரசின் ஆதரவும், ஊக்கமும் உறுதி செய்யப்பட்டால் விளையாட்டின் பல்வேறு பிரிவுகளிலும் தேச அளவில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் வீரர்களும், வீராங்கனைகளும் முனைப்புடன் பயிற்சி பெற்று தங்களுடைய திறன்களை முழுமையாக மேம்படுத்திக்கொண்டு சர்வதேச அளவில் சிறப்பாக பிரகாசிப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்கலாம்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா போன்ற மிக முன்னேறிய நாடுகளும், சீனா, கொரியா போன்ற ஆசிய (முன்னேறிவரும்) நாடுகளும் விளையாட்டில் சிறப்புப் பெறுவதற்குக் காரணம், திறன் கொண்ட இளம் வயதினரை தேர்வு செய்து, அவர்களை முறையாக பயிற்றுவித்து, அவர்களின் திறன்கள் மேம்படுவதற்கு உரிய வசதிகளை உருவாக்கியளிப்பதுதான் என்பதை கருத்தில்கொள்ளவேண்டும்.
மாநிலத்திற்கு மாநிலம் தடகள அமைப்புக்களை மட்டுமே உருவாக்கிவைத்துக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. நமக்கு நாமே பாராட்டிக் கொள்ளக்கூடிய தேச சாதனைகளை மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக் கொண்டு புளங்காகிதம் அடையலாமே தவிர, சர்வதேசத் தரதிற்கு வீரர், வீராங்கனைகளை உருவாக்க இயலாது.
பிறகு என்னதான் செய்ய வேண்டும்? தேச அளவில் விளையாட்டுக் கொள்கையை உருவாக்க வேண்டும். கல்வியோடு விளையாட்டை பிணைக்க வேண்டும். கிராம அளவிலிருந்து ஒவ்வொரு மட்டத்திலும் போட்டிகளை நடத்த வேண்டும். சிறந்த திறன்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முழு வசதிகளுடன் கூடிய பயிற்சி அளிக்கவேண்டும். சர்வதேச போட்டிகளில் பெருமை சேர்ப்போருக்கு உயர் நிலை வேலை வாய்ப்புகளை வழங்கிடவேண்டும். இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் ஒரு கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலான நிர்வாக அமைப்பைக்கொண்டு செய்திட வேண்டும். தனியார் நிறுவனங்கள் செய்ய முன்வரவேண்டும் என்று (நமது பிரதமர் கூறுவது போல) வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கக் கூடாது.
இதையெல்லாம் சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே செய்யத் துவங்கியிருந்தால், 1964 ஒலிம்பிக் போட்டிகளில் (4வது இடத்தில் வந்தாலும்) மில்கா சிங் போன்ற பல வீரர், வீராங்கனைகளை உருவாக்கியிருக்க முடியும்.
இப்பொழுதாவது செய்யத் துவங்குவோம்... டோலா பானர்ஜி போன்ற பலரை உருவாக்குவோம்.