அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இடம் வழங்க வேண்டும் என்ற மசோதாவுக்கு பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளதை சமீபத்திய செய்திகள் உணர்த்தி வருகின்றன். ஆனால், உலகளவில் பிரபலமடைந்துள்ள செஸ் விளையாட்டில், பெண்களின் நிலை இன்னும் உயர வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது... காரணம் சர்வதேச செஸ் சாம்பியன் பட்டத்தை இதுவரை எந்தப் பெண்ணும் வென்றதில்லை.சர்வதேச அளவில் புகழ் பெற்று, நம்பர்-1 வீரராக விளங்கும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சிறுவயதில் தனது அன்னை சுசீலா, சதுரங்கத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுவதை பல செய்திகள் வெளிப்படுத்தி உள்ளன.
பெண்களுக்கான சர்வதேச செஸ் போட்டிகள் தனியாக நடத்தப்பட்டாலும், ஹங்கேரி நாட்டின் பிரபல வீராங்கனை ஜூடிட் போல்கர் போன்றோர், இதில் விளையாடுவது இல்லை. மாறாக ஆண் - பெண் என இருபாலரும் பங்கேற்கும் சர்வதேச செஸ் சாம்பியன் போட்டியிடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெண்கள் யாரும் கைப்பற்றியதில்லை என்பது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
கடந்த 1896 ஆம் ஆண்டு முதல் செஸ் போட்டிகளில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். அன்று முதல் இந்த கறுப்பு-வெள்ளை விளையாட்டில் பல 'ராணிகள்' மகுடம் சூடியிருந்தாலும், அது பெண்கள் மட்டும் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளாகவே இதுவரை இருந்துள்ளது.
செஸ் விளையாட்டில் பிரபல பெண்கள்!
அன்னா குல்கோ என்ற பெண்மணி, அமெரிக்காவின் பெண்கள் செஸ் பட்டத்தை 9-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதேபோல் கடந்த 1859-1924 வரை வாழ்ந்த எடித் பெய்ர்ட், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிக்கலான செஸ் விளையாட்டுகளுக்கு விடை கண்டறிந்த பெருமையை பெற்றவர்.
கடந்த 2001-2004ம் ஆண்டு வரை சர்வதேச பெண்கள் செஸ் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சீன வீராங்கனை ஸு-சென் (Zhu Chen), இதுவரை 2,483 ஈ.எல்.ஓ. புள்ளிகளை பெற்று சக வீரர்களை தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
ரஷ்யாவை சேர்ந்த மேய ஷிபர்டனிட்ஸ் (Maia Chiburdanidze), 13 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டராக பட்டம் பெற்றார். 16 வயதில் ரஷ்யாவின் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 17 வயதில் சர்வதேச பெண்கள் சாம்பியன் பட்டத்தையும் வென்று உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்த சாதனைப் பெண்மணி.
இதே போல் கடந்த 1933 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த பெண்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை, மகாராஜா உமர் ஹயத்கானின் அரண்மனை சேவகி பாத்திமா வென்றுள்ளது, சுதந்திர இந்தியாவுக்கு முன்பு வாழ்ந்த இந்திய பெண்களின் செஸ் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதே பட்டத்தை 13 வயது 4 மாதங்களை நிறைவு செய்த கோனேரு ஹம்பி கடந்த 1990-91 ஆம் ஆண்டில் வென்று, மீண்டும் இந்திய பெண்களின் கொடியை சர்வதேச செஸ் கம்பத்தில் உயரப் பறக்கவிட்டார். (தற்போது செஸ் வீராங்கனைகளில் ஜூடிட் போல்கருக்கு அடுத்த (2வது) இடத்தில் ஹம்பி உள்ளார்.)உலகின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக கருதப்படும் ஜூடிட் போல்கர், 12 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். சமீபத்தில் காலமான அமெரிக்கா வீரர் பாபி பிஷ்ஷர் மற்றும் ரஷ்யாவின் கேரி காஸ்ப்ரோவை விட குறைவான வயதில் அவர் இப்பெருமையை பெற்றவர்.மேற்கூறிப்பிட்ட பெண்களின் அளவுக்கு சிறப்பாக விளையாடும் தகுதி பெற்ற பெண்கள் பலர் உலகளவில் இருந்தாலும், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இன்று வரை எந்த மங்கையும் வென்றதில்லை. இதற்கு பெண்களுக்கு நீண்டகால பயிற்சி தேவைப்படும்... பெண்கள் இவ்விஷயத்தில் இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்... குடும்ப சூழ்நிலைகளும் ஒரு காரணம்... போட்டியாளரின் நகர்த்தல்களை கணிக்கும் திறமை பெண்களுக்கு இல்லை... என பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வழக்கம் போல் கூறப்படுகிறது.
இதுகுறித்து 64 ஸ்கொயர் மெஜிசியன் (64 Square Magician) என்றழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை கூறுகையில், "சிறப்பான செஸ் வீரர்கள் பங்கேற்கும் செஸ் தொடர்களில் பெண்கள் பங்கேற்பதில்லை. எனவே அவர்களுக்கு போதிய பயிற்சியும், நம்பிக்கையும் கிடைப்பது இல்லை என தாம் கருதுவதாக" கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் தரக்கூடாது என யாரும் தடுப்பது கிடையாது. இத்துறையில், பெண்களுக்கு ஆர்வமும், முறையான பயிற்சியும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் இப்போட்டியில் "ராணிகளின் கொடியும் பறக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
விமானம் முதல் விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் கொடிகட்டு பறக்கும் பெண்கள், சதுரங்கத்திலும் தங்கள் முத்திரையை பதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நம்பலாம்.