ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெய்ஜிங் நகரத்தில் உள்ள கடும் மாசு காரணமாக போட்டிகளை பெய்ஜிங்கிலிருந்து மாற்றவேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது இட மாற்றம் சாத்தியம் இல்லை என்று மறுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங் நகர சுற்றுச்சூழல் மாசு காரணமாக பங்கு பெறும் வீரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
10,000 மீ. மராத்தான் ஓட்டப்பந்தய எத்தியோப்பிய நட்சத்திரம் ஹெய்ல் கெப்ரிசிலஸ்ஸி ஆஸ்துமா நோயால் அவதியுறுவதன் காரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்குபெறுவதை மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்திருந்ததையடுத்து இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்" வீரர்களின் ஆரோக்கியம் முக்கியமானதே, ஆனால் அவர்கள் பாதிப்படையாதவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, போட்டிகளை புதிய இடத்திற்கு மாற்றுவது செயல் அளவில் சாத்தியமல்லை" என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங் சுற்றுச்சூழலை பரிசோதிக்கும் வண்ணம் நடத்தப்பட்ட பரிசோதனை போட்டிகளில் தடகள வீரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மருத்துவக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் மராத்தான், சைக்கிள் போட்டிகள், மலை பைக் பந்தயம், மராத்தான் நீச்சல், ட்ரையத்லான் மற்றும் சாலை நடை ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கும் திட்டம் வைத்திருப்பதாக ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது. உதாரணமாக ஒரு சில போட்டிகளை அதன் குறிப்பிட்ட நேரத்திலிருந்து சில மணி நேரங்கள் தள்ளி வைத்து வீரர்களை பாதுகாக்கும் திட்டம் இருப்பதாக அது கூறியுள்ளது.
இதனால் சில போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒலிம்பிக் நிறைவு விழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் நகரத்தின் காற்று மாசை தூய்மை படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.