ஒலிம்பிக் : 100 மீட்டர் ஓட்டத்தின் மும்மூர்த்திகள்!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (18:24 IST)
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் தடகள வீரர் யார் என்பதைக் கணிப்பது அவ்வளவு சுலபமில்லை என்றே தோன்றுகிறது.வரும் ஆகஸ்ட் 16ம் தேதி, 11.30 மணியளவில் துவங்கி பத்து நிமிடங்களில் முடிந்து விடும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உலகின் மிக வேகமான தடகள வீரரை உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.இந்தத் தகுதிக்கு உரிய வீரர்களாக ஜமைக்காவின் உசைன் போல்ட் மற்றும் அசாஃபா பாவல், அமெரிக்காவின் டைசன் கே ஆகியோர் திகழ்கின்றனர்.இந்த மும்மூர்த்திகளைப் பற்றிய ஒரு சிறிய முன்-ஓட்டம்...உசைன் போல்ட்: கடந்த மே 31ஆம் தேதி நியூயார்க்
நகரில் நடந்த ரீபாக் கிராண்ட் ப்ரிக்ஸ் (Reebok Grand Prix) போட்டித் தொடரில், 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட இவர், பந்தய தூரத்தை 9.72 விநாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம், பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும் 100 மீட்டர் போட்டியிலும் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கடந்த 1986 ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜமைக்காவின் ட்ரிலாவ்னி பகுதியில் பிறந்த உசைன் போல்ட், 2002இல் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளத் தொடரில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
சர்வதேச தடகள சம்மேளனத்தின் கூட்டமைப்பின் (ஐ.ஏ.ஏ.எஃப்)சார்பில் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்று அறிவிக்கப்பட்டுள்ள உசைன், ஐ.ஏ.ஏ.எஃப்-இன் வளர்ந்து வரும் நட்சத்திர விருதை 2 முறை பெற்றுள்ளார்.
டைசன்-கே: அமெரிக்க தடகள வீரரான இவர், கடந்த 2007இல் ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர்.
1982
ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்த டைசன்-கே, ஒலிம்பிக் தகுதிச்சுற்று காலிறுதிப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.77 விநாடிகளில் கடந்ததன் மூலம் பலரது பாராட்டையும் பெற்றார்.தடகளத்தில் சிறந்து விளங்கும் அமெரிக்காவைப் பொறுத்த வரை டைசன் கே தற்போது முன்னணி தடகள வீரராக விளங்கி வருகிறார்.பீஜிங் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெறும் தகுதியுள்ள ஜமைக்கா வீரர் அசஃபா பாவலை, டைசன் கே ஒசாகாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் வென்று முதலிடம் பெற்றார். இதன் காரணமாக முக்கிய போட்டிகளில் வெற்றி பெறக் கூடிய உத்வேகம் டைசன் கே இடம் உள்ளதால் ஒலிம்பிக்கிலும் இவரது ஆதிக்கம் தொடரும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.அசாஃபா பாவல்: ஜமைக்காவின் மற்றொரு முன்னணி வீரராக திகழும் இவர், 2005 ஜூன் முதல் 2008 மே வரையிலான காலகட்டத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக விளங்கினார்.
இக்கால கட்டத்தில் இவர் 3 முறை உலக சாதனை படைத்ததன் மூலம் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்வார் என ஜமைக்கா ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 9.74 விநாடிகளில் கடந்ததே இவரது குறைந்தபட்ச நேரமாக உள்ளது. மூன்று முறை உலக சாதனையை தகர்த்த பொவல், விரைவில் உசைன் போல்ட் வசம் உள்ள 9.72 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்த சாதனையையும் தகர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.