புவனேஷ்வர்: 2002ஆம் ஆண்டு ஆசிய பளு தூக்கும் (Power Lifting) விளையாட்டு போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம், சமீபத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டிகளில் 3 தங்கம் ஒரு வெள்ளி வென்று பளு தூக்குதலில் சாதனைகள் நிகழ்த்தி வரும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை மந்தாகினி மஹாந்தா ஏழ்மைப் பளுவையும் சேர்த்து சுமந்து வருகிறார்.
மந்தாகினி மஹந்தாவின் திறமையை கண்டு அதிசயிக்கும் பயிற்சியாளர் பரேஷ் சந்திர் மகந்தா, "பளுதூக்குதல் ஸ்க்வாட் பிரிவில் 117.5 கிலோவும், பெஞ்ச் பிரச் பிரிவில் 62.5 கிலோவும், டெட் லிஃப்ட் பிரிவில் 150 கிலோவும் மந்தாகினி தூக்கியுள்ளார்", என்று கூறியுள்ளார்.
பளு தூக்குதலில் மந்தாகினி செய்தது போதாது என்று அரசு கருதுகிறதோ என்னவோ தெரியவில்லை, அதனால்தான் போட்டிகளில் பங்கேற்க செல்வதற்கான செலவுகளை கூட மந்தாகினியே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது.
ஆனால் மந்தாகினியோ கடந்த 14 ஆண்டுகளாக பளுதூக்குதலை தொடர்ந்து ஒரு லட்சிய வெறியுடன் செய்து வருகிறார். பணம் இல்லாத காரணத்தினால் உள் நாட்டு, பன்னாட்டு பளு தூக்கும் போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கூட அவர் விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிய மொழியில் முதுகலை பட்டம் பெற்ற மந்தாகினி தினமும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோலாதீஹி கிராமத்திலிருந்து உடற்பயிற்சி நிலையத்திற்கு சைக்கிளில் செல்கிறார். ஆனால் பளு தூக்குதலில் ஈடுபடத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிசா முதல்வர் நவீன் பட்னாயக், நேஷனல் அலுமினியம் நிறுவனம், ரூர்கேலா எக்கு நிறுவனம் ஆகிய அரசு நிறுவனங்களில் மந்தாகினிக்கு வேலை கொடுக்குமாறு பரிந்துரை செய்தார். ஆனால் இரண்டு நிறுவனங்களுமே இதற்கு செவி சாய்க்கவில்லை.
பளுதூக்குதல் மட்டுமல்லாது, கராத்தே, குத்துச் சண்டை ஆகியவற்றிலும் அரிய திறமைகளை கொண்டவர் மந்தாகினி என்று அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்.
திறமையிருந்தும் பணம் இல்லை என்ற ஒரே காரணத்தினால் மெல்போர்னில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தன்னால் பங்கு பெற முடியாமல் போய்விட்டது என்று கூறும் மந்தாகினி, தற்போது தலை நகர் புது டெல்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளிலும் பணம் இல்லாத காரணத்தினால் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதாக தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மந்தாகினி மஹந்தாவின் தந்தை ஷியாம் சுந்தர் மஹந்தா ஒரு ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். 2 ஏக்கர் நிலமும், அவரது ஓய்வூதியமும்தான் குடும்பத்தின் ஜீவனத்திற்கான ஆதாரமாக இருந்து வருகிறது.
தனது மகளிடம் இருக்கும் அரிய திறமையை ஊக்குவிக்கும் அந்த தந்தை நிதி அளவில் எந்த வித உதவியையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். 2010 காமன்வெல்த் போட்டிகளில் மந்தாகினி கலந்து கொள்ள முடியாமல் போனால் அவரது பளு தூக்கும் விளையாட்டிற்கே அவர் முழுக்கு போட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படலாம் என்று அவர் தந்தை கூறியுள்ளார்.
ஆனால் பாரிபாடாவில் உள்ள சமூக ஊழியர் விஜய் மிஷ்ரா என்பவர் மந்தாகினியின் திறனைப் பார்த்து அவரை ஊக்குவிக்கும் வண்ணம் அவரது உடற்பயிற்சி மற்றும் உபகரண செலவுகளுக்கு நிதி உதவி செய்து வருகிறார்.
தினமும் உடற்பயிற்சி நிலையத்தில் மந்தாகினி பயிற்சி செய்வதற்கான கட்டணங்களை விஜய் மிஷ்ரா கொடுத்து உதவி வருகிறார். இந்த உதவிகளை இவர் மந்தாகினியின் 9ஆம் வயதிலிருந்தே செய்து வருகிறார். மந்தாகினியின் இந்த தனிமைப் பயணத்தில் விஜய் மிஷ்ரா மட்டுமே நண்பனாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருவதாக மந்தாகினியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஃபெடரேஷன் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்ற மாந்தாகினி நாட்டின் 7வது பலசாலி வீராங்கனை என்ற பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க சுமார் ரூ. 1.5 லட்சம் தேவைப்பட்டது என்பதால் மந்தாகினி மஹந்தா உள்ளூர் பத்திரிக்கை ஒன்றில் நிதியுதவி கேட்டு விளம்பரம் செய்தார். ஆனால் அந்த விளம்பர செலவைக்கூட கொடுக்க முடியவில்லை. கடைசியில் அந்த செய்தித்தாள் நிர்வாகம் விளம்பரத் தொகை இல்லாமலேயே வெளியிட்டது.
அதன் மூலம் இவருக்கு பணம் வந்து சேருவதற்குள் ஆசிய பளுதூக்கும் போட்டிகளே முடிந்து போய்விட்டது என்று கூறினார் மந்தாகினி
சர்வதேச பளுதூக்கும் போட்டிகள் குறித்த அவரது கனவுகள் இவ்வாறிருக்க, அவருக்கு கிடைக்கவிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் வேலையும் இன்னமும் உறுதியாகவில்லை. 3 ஆண்டுகளாக பணி நியமனக் கடிதத்திற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
பொழுது விடிந்து பொழுது போனால் நாட்டின் ஒட்டு மொத்த உள் நாட்டு உற்பத்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் போலிப் பெருமை கொள்ளும் நம் அரசு ஒரு திறமையான விளையாட்டு வீராங்கனைக்கு தேவைப்படும் ஒரு சாதாரணத் தொகையைக் கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளது போலும்!!