Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா - சில நினைவலைகள்

Advertiesment
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா - சில நினைவலைகள்
, புதன், 24 பிப்ரவரி 2010 (16:34 IST)
ஹீரோ ஹோண்டா உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் புது டெல்லி தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

1981-82ஆம் ஆண்டு மும்பையில் உலகக் கோப்பை ஹாக்கி நடைபெற்றதையடுத்து சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் மீண்டும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கியின் பொற்காலங்கள் இன்று வரலாறு மட்டுமே. உலக ஹாக்கியில் செயற்கை விளையாட்டுக் களம் அமைக்கப்பட்ட பிறகு இந்திய ஹாக்கியின் ஆட்டம் சரியத் தொடங்கியது.

1986ஆம் ஆண்டு முதன் முதலாக செயற்கைக் களத்தில் உலகக் கோப்பை ஹாக்கி நடைபெற்றது. அப்போது முதல் ஐரோப்பிய, ஆஸ்ட்ரேலிய அணிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.

புல்தரையில் பந்துகள் அவ்வளவு வேகமாக உருளாது இதனால் கட்டுப்பாடு அதிகம் இருந்தது. செயற்கைக் களத்தில் பந்துகளை கட்டுப்படுத்துவது கடினம். எனவே அதுகாறும் இந்திய வீரர்கள் கடைபிடித்து வந்த பந்து கடத்திச் செல்லல், ட்ரிபிளிங் போன்ற உத்திகள் காலாவதியாயின.

புல் தரையைக் காட்டிலும் செயற்கைக் களத்தில் வேகம் இன்னும் சற்று அதிகம் தேவைப்பட்டது. அந்த வேகத்திற்கு ஆடத் தேவையான பயிற்சிகளைப் பெற போதுமான செயற்கைப் புல் ஆட்டங்களங்கள் இந்தியாவில் அமைக்கப்படவில்லை.

ஹாக்கியில் கொடிகட்டிப்பறந்த இந்தியா சரிய, பாகிஸ்தானும் சரிந்தது. ஆனால் இந்தியா அளவுக்கு சரியவில்லை. 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றது. அதற்குக் காரணம் அப்போதிருந்த பாகிஸ்தான் அணியே. காலித் மஹ்மூத், கலிமுல்லா, சலிமுல்லா, ஹஸன் சர்தார் என்ற சிறப்பான ஆட்டக்காரர்களின் திறன் மேற்கத்திய அணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்தியா வென்ற 1975 உலகக் கோப்ப

உலகக் கோப்பை ஹாக்கியில் ஒரு தனித்த போட்டியில் 2 கோல்களை அடித்த இந்திய வீரர்கள் மொகிந்தர் சிங், ரஜிந்தர் சிங், முகேஷ் குமார் ஆகிய 3 வீரர்களே.

இந்திய ஹாக்கியின் தந்தை என்று கருதப்படும் தயான் சந்தின் மகன் அஷோக் குமார், பிற்கால இந்திய ஹாக்கி நட்சத்திரம் தன்ராஜ் பிள்ளை ஆகிய இருவரும் 4 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

முதல் 3 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அந்தத் தொடர் முழுதும் 1 போட்டியில் மட்டுமே தோல்வி தழுவியது. ஆனால் செயற்கைக் களம் துவங்கிய 1986ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி வரை இந்தியா ஒரு போட்டியில்தான் வெல்ல முடிந்தது என்றால் எப்படி அதன் திறன் வீழ்ச்சியடைந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

1975ஆம் ஆண்டு அஜித்பால் சிங் தலைமை இந்திய ஹாக்கி அணிதான் இதுவரையிலான சிறந்த இந்திய ஹாக்கி அணியாக கருதப்படுகிறது. இந்த அணிதான் இந்தியாவிற்கு உலகக்கோப்பையை பெற்றுத் தந்தது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் மதியம் 2 மணிக்கு ஆடப்பட்ட போட்டியில் இந்தியா, பலமான இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இரண்டு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்புகளை - தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.ே. பிலிப்ஸ் கோல்களாக மாற்றி வெற்றி பெறச் செய்தார்.

அடுத்த ஆட்டம் மீண்டும் பலமான வீழ்த்த முடியாத ஆஸ்ட்ரேலிய அணியுடன் நடைபெற்றது. இந்தியாவிறு சமீபத்தில் பயிற்சி அளிக்க வந்த சார்ல்ஸ்வொர்த் ஹாக்கி பயணத்தை தொடங்கியது இப்போதுதான்.

இந்திய அணியின் சென்டர் ஃபார்வர்ட் கோவிந்தா அபாரமாக ஒரு பந்தை கடத்திச் சென்று நேரடியாக கோலாக மாற்றினார். ஆனால் ஆட்டம் 1-1 என்று டிரா ஆனது.

அடுத்த ஆட்டத்தில் அந்த உலகக் கோப்பையில் தகுதி பெற்ற ஆப்பிரிக்க அணியான கானாவை இந்தியா 7-0 என்று அபாரமாக வெற்றி பெற்றது. அப்போதெல்லாம் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்றது அர்ஜென் டீனா அணி. அந்த அணி அன்றைய தினத்தில் எந்த அணியையும் மண்ணைக் கவ்வச்செய்யும் திறமை பெற்றிருந்தது.


அதேபோல் இந்தியாவை அர்ஜென்டீனா அதிர்ச்சிகரமாக 2-1 என்று வீழ்த்தியது. ஹர்சரண்சிங் என்ற வீரர் இந்தியாவின் ஒரே கோலை அடித்தார்.

இப்போது ஒரு டிரா, ஒரு தோல்வி என்ற நிலையில் இந்தியா தன் கடைசி பிரிவு மட்ட போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

வானொலி முன்பு அப்போது ஹாக்கி வர்ணனையைக் கேட்டவர்கள் ஏராளம். இந்தப் போட்டியில் இந்தியா ஜெர்மனி அணியை 3-1 என்று வீழ்த்தியது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ், ஹர்சரண் சிங், மொஹிந்தர் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி உள் நாட்டு அணியான மலேசியாவை எதிர்கொள்ள நேரிட்டது. மலேசிய அணி அப்போதெல்லாம் மிகவும் பலமான அணியாகும். பெனால்டிகளை கோல்களாக மாற்றுவதில் அந்த அணிக்கு ஈடான அணி வேறு இல்லை என்று கூறுமளவிற்கு பல திறமையான வீரர்களைக் கொண்டிருந்தது.

சுமார் 40,000 பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தியா-மலேசியாவை எதிர்கொண்ட போட்டி இன்று வரை ஹாக்கி ரசிகர்களின் நினைவுகளை விட்டு அகலாலது. தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆட்டம் நகர நகர மலேசியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்ட முடிய இன்னும் 8 நிமிடங்களே உள்ள நிலையில் மைக்கேல் கின்டோ என்பவருக்கு பதிலாக அஸ்லாம் ஷெர் கான் என்ற பதிலி வீரர் களமிறக்கப்பட்டர்.

அப்போதைய ஆக்ரோஷ இந்திய வீரரான அஷோக் குமார் ஒரு பந்தை வெறித்தனமாக "ி" வட்ட்த்திற்குள் கொண்டு வர, மலேசியா வீரர் ஒருவர் ஃபவுல் செய்தார். இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை அஸ்லாம் ஷெர் கான் கோலாக மாற்ற மலேசிய ரசிகர்கள் மௌனமாயினர். இந்தியா 2-2 என்று சமன் செய்தது.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் 3-வது நிமிடத்தில் வலது புற அதிரடி வீரரான வி.ே.பிலிப்ஸ் பந்தை வெகு வேகமாக ட்ரிபிள் செய்து மலேசியா அணியின் பக்கம் சென்று மையப் பகுதியை நோக்கி அடிக்க அங்கு நின்று கொண்டிருந்த ஹர்சரண் சிங் அதனை கோலாக மாற்றினார். இந்தியா 3-2 என்று பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் அப்போதைய பரம்பரை வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

மீண்டும் ஆவலுடன் இந்திய ரசிகர்கள் வானொலி முன்பு அமர்ந்தனர். தொலைக்காட்சி வசதிகள் அப்போது ஒரு சிலரிடம் மட்டுமே இருந்தது. இந்த இறுதிப்போட்டியை தூர்தர்ஷன் சில நாட்களுக்குப் பிறகு ஒளிபரப்பியது.

ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் பாகிஸ்தானின் ஜாகீத் முதல் கோலை அடித்தார்,. ஆனால் 25-வது நிமிடம் வரை இந்தியாவை திறம்பட தடுத்து நிறுத்தியது பாகிஸ்தான் அணி. ஆனால் 25-வது நிமிடத்தில் சுர்ஜீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி 1-1 என்று சமன் செய்தார்.

சர்ச்சையான இறுதி கோல

1-1 என்ற சம நிலையில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அப்போது கோல் அடிக்கக்கூடிய தூரத்தில் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் மாறி மாறி ஆக்ரோஷமான திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மாஸ்டர் ட்ரிப்ளர் என்று அழைக்கப்பட்ட அஷோக் குமார் அந்த முக்கியமான, வெற்றி கோலை அடித்தார்.

இதில் என்ன சர்ச்சை என்றால், மலேசிய நடுவர் கலாசிங்கனம் விஜயநாதன் இந்த அஷோக் குமார் ஷாட்டை கோலாக அறிவிப்பதா அல்லது பெனால்டி கார்னர் கொடுப்பதா என்ற இரட்டை மனோநிலையில் குழம்பியபடியே கோல் என்று அறிவித்து விட்டார். அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.

1971ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியது. 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. 1964ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பை ஹாக்கியில் மகுடம் சூடியது.

ஆனாலும் 15 முறை பாகிஸ்தானுடன் மோதியுள்ள இந்தியா இந்த உலக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றி உட்பட 5 போட்டிகளிலேயே வென்றிருந்தது.

அதுவும் முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஆட்டத்தில் இந்தியா 2 கோல்களை அடித்தது என்றால் பாகிஸ்தானின் பலத்தை நினைத்துப் பார்க்கவும்.

அஜீத்பால் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோப்பையுடன் அந்த அணி இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் வலம் வந்தது. ஹாக்கி ஆட்டத்தின் மீது இளைஞர்களுக்கு அபரிமிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.

1975ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிக்கு பிறகு ஒரு முறை கூட 3 ஆசிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்ததில்லை என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

1969ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் கருத்தில் உதித்த இந்த உலகக் கோப்பை ஹாக்கி என்பது 1971ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாயிருந்த முதல் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இருந்த அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா பங்கேற்க மறுக்கும் என்ற காரணத்தினால், ஸ்பெய்னில் உள்ள பார்சிலோனா நகருக்கு மாற்றப்பட்டது.

அந்த உலக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் தன்வீர் தார் ஹிரோவாக எழுச்சியுற்றார். உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் கோலை அடித்த வீரர் என்ற பெருமை பெற்ற தன்வீர் தார், முதல் ஹேட்ரிக் சாதனையையும் நிகழ்த்தினார்.

ஹாலந்து வீரர் டைஸ் குரூய்ஸ் என்பவர் 1971ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை 6 உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையை இன்று வரை பெற்றுள்ளார்.


1986ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்ட்ரேலியா ஹாக்கி உலகை ஆளத்தொடங்கியது. அதற்கு பெரும்பாலும் காரணமாக அமைந்த வீரர், இன்று ஹாக்கி மேதை என்று அழைக்கப்படும் சார்ல்ஸ்வொர்த் என்றால் அது மிகையாகாது.


பாகிஸ்தானில் காலித் மஹ்மூத், இஸ்லாஹுதீன், ஷானாஸ், ஹஸன் சர்தார், கலிமுல்லா, சலிமுல்லா, அதன் பிறகு 90-களில் ஒரு ஹாக்கி மேதை- ஷாபாஸ் அகமட் என்று ஹாக்கி திறமைகள் கொடிகட்டிப் பறந்தன.

பாகிஸ்தானின் அபாரமான திறமையும், அழகான சாதுரியமான ஆட்டமும் அந்த அணிக்கு 1971, 1978, 1982 பிறகு 1994ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை வெற்றிகளை பெற்றுத் தந்தது.

ஹாலந்து அணியும் 1973, 1990, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை வென்றது. ஹாலந்து அணி வீரர்களின் லாங் பாஸ், பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றுவது என்பதில் புதிய புதிய உத்திகளைக் கொண்டு வந்து ஹாக்கி ஆட்டத்திற்கு வண்ணம் சேர்த்தது. அப்போதைய ஹாலந்து ஹாக்கி நாயகன் புளோரிஸ் போவிலாண்டர், இவர் பெனால்டி கார்னர் நிபுணர் என்று அழைக்கப்பட்டார்.

ஜெர்மனி அணி அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த வீரர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தும் 2002ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில்தான் கோப்பையை வெல்ல முடிந்தது.

அதன் பிறகு ஜெர்மனி அணிக்கு சிறந்த கேப்டன் ஒருவர் கிடைத்தார். புளோரியன் குன்ஸ் என்ற அந்த அசாத்தியமான வீரரின் தலைமையின் கீழ் ஜெர்மனியில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையையும் அந்த அணி வென்றது.

இந்தியாவும் அதன் பங்கிற்கு சிறந்த வீரர்களை களத்திற்குக் கொண்டு வந்தது. அஷோக் குமார், கோவிந்தா, பிலிப்ஸ், வினய் குமார், முகேஷ் குமார், மொகமட் ஷாகித், மொகிந்தர் பால் சிங், ரஜிந்தர் சிங், அஜித்பால் சிங், தோய்பா சிங் ஆகியோர் இந்தியாவின் ஓரளவு ஆதிக்கக் காலக்கட்டத்தில் மிளிர இந்தியா சரிவடந்த காலத்தில் பாஸ்கர் மற்றும் என்றும் மறக்க முடியாத தன்ராஜ்பிள்ளை ஆகியொரை உருவாக்கியது.

இந்த 2010 உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதிச் சுற்றில் விளையாட நேரிட்டிருந்தால் தகுதி பெறாமல் போயிருக்கக் கூடிய வாய்ப்புகள்தான் பிரகாசமாயிருந்தது. ஆனால் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியா தானாகவே தகுதி பெற்றது.

செயற்கைக் களம் வந்த பிறகு இந்திய ஹாக்கியின் திறன் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. ஆனால் இதற்குக் காரணம் செயற்கைக் களம் மட்டுமல்ல.

இந்திய ஹாக்கி கூட்டமைப்பில் இருந்த அரசியல், ஊழல். வீரர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்காதது. அவர்கள் தங்குவதற்குக் கூட ஒழுங்கான ஏற்பாடுகள் இல்லாதது உட்பட பல புறக்காரணிகளே இந்திய ஹாக்கியின் சீரழிவிற்குக் காரணமாக அமைந்தது.

செயற்கை ஆட்டக்களங்களை பரமாரிக்காமல் விட்டு விடுவது, வீரர்கள் பயிற்சி செய்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை என்று நாம் காரணங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது.

மொத்தத்தில் இன்று கிரிகெட்டை விட பெருமிதமாகப் பேசப்பட வேண்டிய இந்திய ஹாக்கி இந்திய கால்பந்தைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நினைத்து நம் அரசுகள் தலைகுனியவேண்டும். இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி, இந்தியாவின் தேசியப் பறவை மயில். தேசிய விலங்கு புலி போல ஹாக்கியும் காணாமல் போகாமல் தடுக்க அனைவரும் முன் வருவது அவசியம்.

பிப்ரவரி 28ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியாவின் பி பிரிவில் ஆஸ்ட்ரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் உள்ளன. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவையும், இங்கிலாந்தையும் வீழ்த்தினாலே பெரிய விஷயம்.

ஆஸ்ட்ரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற அணிகளை வீழ்த்தும் அளவுக்கு இந்திய ஹாக்கி அணியில் திறமை இல்லை என்பதை நினைவில் கொண்டே நாம் இந்த உலகக் கோப்பைப்போட்டிகளை பார்க்வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil