1970ஆம் ஆண்டு தொடங்கிய தொழில்பூர்வ மகளிர் உலக டென்னிஸ் போட்டிகள் இன்று தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
துவக்கத்தில் 7,500 டாலரகள் பரிசுத் தொகைக் கொண்ட தொடராகத்தான் இது தொடங்கியது. ஆனால் இன்று அது 85 மில்லியன் டாலர் வர்த்தகமாகியுள்ளது.
தொழில்பூர்வ மகளிர் டென்னிஸிற்கு அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் உலகம் முழுதும் கிறிஸ் எவர்ட் லாய்ட், நவ்ரதிலோவா, ஸ்டெஃபி கிராஃப், செரீனா, வீனஸ் வில்லியம்ஸ், மோனிகா செலெஸ் போன்ற பெயர்கள் வீட்டில் உச்சரிக்கப்படும் பெயர்களானது.
சமீபத்தில்தான் ஆடவர் டென்னிஸ் க்ராண்ட்ஸ்லாமில் அவர்களுக்குக் கொடுக்கும் பரிசுத் தொகையே தங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் வாதாடிப் பெற்றனர்.
டென்னிஸ் என்பது ஒரு விளையாட்டு, இதில் ஆடவர் டென்னிஸுக்கு பரிசு அதிகம் வீராங்கனைகளுக்குக் குறைவு என்பது டென்னிஸ் ஆட்டத்திறன் காரணங்களுக்காக அல்லாமல் பாலின பேத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதை அவர்கள் சரியாகவே எதிர்த்து வெற்றியும் பெற்றனர்.
ஆனால் இன்றும் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் டென்னிஸ் கூட்டமைப்புகளும் ரஃபேல் நடால்-ரோஜர் ஃபெடரர் விளையாடும் போட்டியே அதிக சிறப்பு வாய்ந்தது என்று விளம்பரப்படுத்துகின்றனர். இது உண்மையில் ஹை வோல்டேஜ் போட்டித் தொடர் என்பதை ம்றுப்பதற்கில்லை.
ஆனால் அதே அளவு ஹை வோல்டேஜ் தன்மை நவ்ரதிலோவா-கிறிஸ் எவர்ட் லாய்ட் விளையாடும் போட்டியிலும், ஸ்டெஃபி கிராப்-மொனிகா செலஸ் விளையாடும் போட்டியிலும், செரீனா வில்லியம்ஸ்-கிளைஸ்டர்ஸ் விளையாடும் போட்டியிலும், கிளைஸ்டர்ஸ், ஹெனின் மோதும் போட்டிகளிலும் உள்ளது என்பதை நாம் கண்டு களித்து வருகிறோம்.
1970ஆம் ஆண்டு 9 வீராங்கனைகளே முதன் முதலில் வர்ஜீந்தியா ஸ்லிம்ஸ் சர்க்கியூட் டென்னிஸ் தொடரில் பங்கேற்றனர். இவர்களுக்கு ஸ்பான்சர் செய்த உலக டென்னிஸ் பப்ளிகேஷன், இவர்களுக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியடையவேண்டாம். ஒரு டாலர் ஒப்பந்தமே அது.
ஆனால் 1971ஆம் ஆண்டு 20 டென்னிஸ் தொடர்கள் கொண்ட ஒரு ஆட்டமாக மகளிர் டென்னிஸ் மாறியது. முதல் தர வீராங்கனையான பில்லி ஜான் கிங் என்பவரது வருவாய் ஆண்டொன்றுக்கு 6 இலக்கத் தொகையை எட்டியது.
பிறகு 1973ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உருவானதுதான் இன்றைய WTA, அதாவது உலகமகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு.
1980ஆம் ஆண்டில் உலகம் முழுதும் 250 டென்னிஸ் வீராங்கனைகள் ஆண்டு முழுதும் 47 தொடர்களில் விளையாடத் துவங்கினர்.
இதே 1980 சீசனில்தான் மார்டினா நவ்ரதிலோவா 10லட்சம் டாலரகள் தொகை ஈட்டினார்.
2007ஆம் ஆண்டு சம பரிசுத் தொகை அமலுக்கு வந்தது. ஆனாலும் மகளிர் டென்னிஸ் பற்றிய ஒரு குறைந்த மதிப்பீடுதான் உள்ளது. செரீனா வில்லியம்ஸ் ஒரு முறை, மகளிர் டென்னிசை மட்டம்தட்டிய ஒரு பத்திரிக்கையாளரை கடிந்து கொண்டதும் நடந்துள்ளது.