Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!

Advertiesment
இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!
, வெள்ளி, 14 மார்ச் 2008 (18:38 IST)
webdunia photoWD
உலகின் தலைசிறந்த அணியாகத் திகழ்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கப் பதக்கங்களை வென்று தன்னிகரற்றுத் திகழ்ந்த இந்திய அணி, இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு, இழந்த பெருமையை மீண்டும் பெற்று அந்த உன்னத நிலைக்கு மீண்டும் உயருமா?

நிச்சயம் உயரும் என்று உறுதியாகச் சொல்லலாம். எந்த (ஐரோப்பிய) நாட்டின் உதவியுமின்றி, இன்றைய ஆட்ட முறையில் ‘புகழப்படும் பண்டிதர்களின்’ திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட எதுவுமின்றி, மீண்டும் உயரும், உயர்த்தக்கூடிய மகோன்னத்த் திறன் இந்திய துணைக் கண்டத்தின் ஹாக்கிக்கு உண்டு.

ஆனால் அதற்கு முதல் நிபந்தனை - நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி - இன்றுள்ள இந்திய ஹாக்கி கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்பட வேண்டும். இந்நாட்டிற்கு பெருமை சேர்த்த முன்னாள் வீரர்களைக் கொண்ட தற்காலிக நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இதனைக் கூறுவதற்கான காரணம்?

இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக கடந்த 14 ஆண்டுகளாக இருந்துவரும் கே.பி.எஸ. கில், தான் தலைவராக இருந்த காலகட்டத்தில் மட்டும் இந்திய ஹாக்கி அணி 10 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் கூறியுள்ளார்.

கேட்பதற்கு பிரமிப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் அதே காலகட்டத்தில் எத்தனை சர்வதேச போட்டிகள் நடந்தன என்பதையும் கில் தெரிவித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும். 1980க்குப் பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கத்தைக் கூட இந்திய அணி வெல்லவில்லை. பல உலகக் கோப்பை போட்டிகள் நடந்துவிட்டன, ஒன்றில் கூட இறுதிக்குத் தகுதி பெறவில்லை.

நான்கு நாடுகள் போட்டி, மூன்று நாடுகள் போட்டி ஆகியவற்றில் வென்றதையெல்லாம் வசதியாக ‘சர்வதேச வெற்றிகளாக’ கணக்கு காட்டுகிறார் கில். 1998 பாங்காக் ஆசியாத் போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்திய அணி வீரர்களை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பந்தாடிய விதம் ஹாக்கி விளையாட்டிற்கு மிக பாதகமான நடவடிக்கைகளாகும்.

ஒரு சாம்பியன் அணியை உருவாக்க பல ஆண்டுகள் (10 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்த பின்னரும்) போதாது என்கிறார்! கில் தலைமையிலான ஹாக்கி நிர்வாகம் இந்திய ஹாக்கியை கெடுத்துக் குட்டிச் சுவராக்கியது என்று பல முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு கில் தான் பெறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறார் முன்னாள் வீரர் அசோக் குமார், இவர் இந்தியாவின் பெருமைமிக்க வீரர் தயான் சந்தின் மகன், ஒலிம்பிக்கில் விளையாடியவர்.

மற்றொரு ஒலிம்பிக் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு உறுப்பினருமான குர்பாக்ஸ் சிங், சாண்டியாகோ சென்ற இந்திய அணியில் இரண்டு வீரர்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கவேண்டும், அவர்கள் சந்தீப் சிங், அர்ஜூன் ஹாலப்பா ஆகியோர். இவர்கள் இடம்பெற்றிருந்தால் முடிவுகள் மாறியிருக்கும் என்று கூறுகிறார். கில் தலைமையிலான ஹாக்கி நிர்வாகம் தான்தோன்றித்தனமாக தேர்வுகளில் தலையிடுகிறது என்பதற்கு இவருடைய கருத்து உதாரணம்.

webdunia
webdunia photoWD
1998ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கு முன்னர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் திறனும், முன்னேற்றமும் எப்படி உள்ளது என்று கேட்கப்பட்டதற்கு, “நமது அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது” என்றே பதிலளித்தார். இறுதிக்குத் தகுதிபெறும் அளவிற்கு நமது அணிக்கு திறமை இல்லையா என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை சிரிக்க வைத்தது. “எந்த அணியாக இருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக ஆடும்போதுதான் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்துகிறார்கள்.

அதனால் இந்திய அணிக்கு ஒவ்வொரு போட்டியும் கடுமையாகவே ஆகிறது. அதனால்தான் நமது வெற்றி வாய்ப்பு கடினமானது...

என்று கூறினேன்” என்றார். எப்படியிருக்கிறது பதில்? இவர்தான் இன்றுவரை நமது ஹாக்கி கூட்டமைப்பின் நிரந்தரத் தலைவர்.

எனவே இந்திய ஹாக்கியை மீண்டும் அதன் உண்மைத் திறனுக்கு உயர்த்த வேண்டுமெனில் இன்றைய நிர்வாகம் நீக்கப்பட்டு, தற்காலிக அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது அதன் நகரங்கள் ஒவ்வொன்றிலும் - மிக முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடக. ஒரிசா. ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் - செயற்கை புல் கள வசதிகளை செய்ய வேண்டும். இன்றைய நிலையில் இது மிக மிக அத்தியாவசியமான தேவையாகும். செயற்கை புல் களத்தில் ஆடும் வாய்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க அதிகமான இளைஞர்கள் போதுமான பயிற்சிப் பெற வாய்ப்பு கிட்டும். திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் தோன்றுவார்கள்.

இதற்குத் தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பெற்றுத் தரவேண்டும்.

மூன்றவதாக, தேச அளவில் ஹாக்கிப் பயிற்சியாளர்கள் பட்டியலை உருவாக்க வேண்டும். இவர்களை சரியாக அடையாளம் காண முன்னாள் ஒலிம்பிக் வீரர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். பட்டியலிற்குத் தேர்வாகும் பயிற்சியாளர்களுக்கு அங்கீகாரமும், மாத ஊதியமும் அளித்து ஊக்குவிக்க வேண்டும். இந்திய ஹாக்கியை பழைய நிலைக்கு உயர்த்த இவர்களால்தான் முடியும். பெரும்பாலும் முன்னாள் தேச, சர்வதேச வீரர்களே பயிற்சியாளர்களாக முன்வருவார்கள், அதுவே சிறந்தது.

webdunia
webdunia photoWD
நான்காவதாக, மாவட்ட ஹாக்கி அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல் ஊரகப் பகுதிகளில் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த முடியாது. திறமை வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் காட்டுவதே மாவட்ட விளையாட்டு அமைப்புகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட, ஊரக அளவில் ஹாக்கி விளையாட்டிற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். இதுவரை கடைபிடிக்கப்பட்டு வ‌‌ந்பிச்சைக்கார அணுகுமுறையை முற்றிலுமாக கைவிடவேண்டும்.

இதற்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.

ஐந்தாவதாக, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தாங்கள் பெறக்கூடிய ஆதரவு நிதிகள் (Sponsors), அவைகளை பயன்படுத்திய விதம் ஆகியவற்றை வெளிப்படையாக்க, ஒவ்வொரு நிதியாண்டிலும் வரவு - செலவு அறிக்கை வெளியிடவேண்டும் என்பதை சட்டபூர்வமாக கட்டாயமாக்க வேண்டும்.

விளையாட்டின் பேரால் நடந்துவரும் ஊழல்களைக் களைய இது மிக மிக முக்கியமாகும்.

இந்திய ஹாக்கிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க, நெருக்கடியான இத்தருணத்தில் மத்திய அரசு தலையிட்டே ஆக வேண்டும். ஒலிம்பிக் விதிமுறைகளை காரணம் காட்டி, பொறுப்பைத் தட்டிக் கழித்தால் அது இந்திய ஹாக்கியை கொன்று விடுவதற்கு ஒப்பாகும்.

இந்திய ஹாக்கிக்கு சோதனையான இந்த கட்டத்தில் மற்றொரு முக்கிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்திய ஹாக்கியை மேம்படுத்த தாங்கள் வகுத்த திட்டத்தை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பிரீடா விரீஸ்மென் ஹாக்கி கூட்டமைப்பிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ஹாக்கியை தூக்கி நிறுத்த சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் உதவி தேவையா? மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேள்விக்கு திங்களன்று பதில் தேடுவோம்.



Share this Story:

Follow Webdunia tamil