இதுதாண்டா காமன்வெல்த் ஊழல், இதுதாண்டா மோசடி!
, திங்கள், 2 ஆகஸ்ட் 2010 (19:43 IST)
இப்போதெல்லாம் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வதுதான் ஃபேஷன். நல்ல விலை உயர்ந்த டிரெட்மில்லின் விலை இன்றைய சந்தை நிலவரப்படி ரூ.7லட்சம். ஆனால் ரூ.9.75 லட்சம் கொடுத்து டிரெட்மில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. நாம் உட்காரும் நாற்காலி அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் என்ன பெரிய ரூ.2000 இருக்குமா? ஆனால் ஒரு நாற்காலியின் விலை ரூ.8000த்திற்கும் மேல். 165 லிட். குளிர்ப்பதனப் பெட்டி எவ்வளவு இருக்கும் மிஞ்சிப்போனால் ரூ.8000 இருக்குமா? ஆனால் அதுவே வாடகைக்கு ரூ.42,000 என்றால் எப்படி இருக்கும்? இதெல்லாம் வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் நகைச்சுவைப்பகுதிகள் அல்ல. இதுதான் காமன்வெல்த் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு மோசடி!காமன்வெல்த் என்பதில் வெல்த் எப்போதும் காமன் கிடையாது என்ற கேலிச் சொற்றொடர் உண்டு. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு தேசத்தின் 'மரியாதையை'க் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் ஊழலும் மோசடியும் செய்து காமன்வெல்த்தை தனிவெல்த்தாக மாற்றி வருவது சுதந்திர இந்தியாவின் தனிச்சிறப்புப் பொருளாதார மண்டலம் போலும்!ஐ.பி.எல். கிரிக்கெட்டா அதிலும் ஊழல், ஹாக்கி இந்தியாவா அதிலும் ஊழல், கால்பந்து, தடகளம், கில்லித்தாண்டு, கோலிகுண்டு, பம்பரம் என்று எதனை இவர்கள் 'மேம்படுத்த' விரும்பினாலும்,அது தங்களது சொத்து மேம்பாட்டிற்குத்தான் என்பதாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.பெருமையுடன் செய்தியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரை அழைத்துக்காட்டிய புதிய, "மேம்படுத்தப்பட்ட' நேரு விளையாட்டரங்கில் உள்ள பளுதூக்கும் விளையாட்டரங்கத்தின் மேற்கூரை பல்லிளித்து விட்டது. மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகி மைதானத்தை நீர்மயமாக்கியுள்ளது இந்த காமன்வெல்த் விளையாட்டு ஒப்பந்தங்களி நிகழ்ந்துள்ள கோடிக்கணக்கான சுருட்டலுக்கு ஒரு எளிய உதாரணம்!
இன்னும் நோண்டினால் நிறைய வெளிவரும், இதனால்தான் மணிசங்கர் ஐயர் இந்த விளையாட்டுப் போட்டிகள் தோல்வியடைந்தால் நல்லது என்றும், இது பற்றி தான் பின்னால் கூறுகிறேன் என்றும் கூறினார். ஆனால் பின்னால் ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்போது வெளிவரும் தகவல்களே போதுமானதாக உள்ளது இந்த ஊழல்களின் ஆழத்தை புரிந்துகொள்ள.வீரர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக டிரெட்மில் வாங்குவதில் ஊழல் என்று செய்தி ஊடகங்கள் இப்போது தெரிவித்துள்ளன. அதாவது டிரெட்மில் எந்திரத்தை வாங்க 9.75 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் நல்ல விலை உயர்ந்த டிரெட்மில்லின் விலை ரூ.7 லட்சம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தச் செய்தி வெளியாகி சில நிமிடங்களுக்கெல்லாம் மற்றொரு திடுக்கிடும் செய்தி, 9.75 லட்சம் கொடுத்தது டிரெட்மில் எந்திரத்தை வாங்குவதற்காக அல்ல மாறாக 45 நாட்கள் அதனை குத்தைகைக்கு எடுத்துக்கொள்ள. இது எப்படி இருக்கு?சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள், டைம்ஸ் நெட்வொர்க் செய்திகளின் படி சாதாரணமான நாற்காலி ஒன்றுக்கு ரூ.8,378 கொடுக்கப்பட்டுள்ளது. 100லி ரெஃப்ரிஜிரேட்டர் ஒன்றுக்கு ரூ.42,202 கொடுக்கப்பட்டுள்ளது.( இதுவும் 45 நாள் வாடகைக்குத்தான்! ) ஏர்கண்டிஷன் எந்திரங்களிலும் இது போன்ற அட்டூழியங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஊழல் இதோடு நின்று விடும் என்று நம்ப நாம் என்ன காதில் பூவையா வைத்துள்ளோம். கட்டுமானப்பணிகள் என்ற பணவிழுங்கி பூதம் ஒன்று உள்ளது. இன்னும் பலப்பல உள்ளன. இதில் அனைத்திலும் என்ன ஊழல்கள் நடைபெற்றிருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடிவதில்லை.இதிலெல்லாம் தனக்கோ அல்லது காமன்வெல்த் போட்டி அமைப்புக்கோ தொடர்பில்லை என்று சுரேஷ் கல்மாடி கைகழுவினால் யார் நம்புவார்கள்? அமைப்பாளர் குழு பச்சைக் கொடி காட்டாமல் தன்னிச்சையாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை.ஆனால் அமைப்புக்குழுவின் செயலரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் செய்தித் தொடர்பாளருமான லலித் பானட் (பெயரில் உள்ள 'லலித்' என்பதை நினைவில் கொள்ளவும்.) இது குறித்துக் கூறுவது ஒரே சமயத்தில் கோபத்தையும், சிரிப்பையும் வரவழைப்பதாய் உள்ளது:"
எங்களுக்கு இந்தச் சாதனங்களை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று இந்தியாவிற்கு வழங்கப்படும் இந்தச் சாதனங்களின் விலை 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வழங்கப்படும் விலைகளை விட குறைவானதுதான் என்று உறுதியளித்துள்ளது." என்று கூறியுள்ளார்.அப்படியென்றால் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் நிலையை நினைத்துப் பார்க்கவும்.இவ்வாறு, இவ்வளவு பெரிய தொகை செலவு செய்து தேசத்தின் 'கௌரவத்தை' காப்பாற்றுவதற்காக நடத்தப்படுகிறது என்று உரிமை கோரப்படும் இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எதற்கும் கவைக்குதவாதது.இதில் வீரர்கள் செய்யும் சாதனைகளை கழுதை கூட மதிக்காது. எந்த சர்வதேச தொடர்களுக்கும் இதனைக் கொண்டு நாம் தகுதி பெற முடியாது. காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஊழல் செய்வதற்கென்றே இந்தியாவால் நடத்தப்படுகிறது.இதில் இவ்வளவு ஊழல் என்றால், இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் அவ்வளவுதான்! நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.