அமெரிக்காவின் போர்வெறிக்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் முழங்கினார் முகம்மது அலி. அந்த காலகட்டத்தில் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது நண்பர்கள் சில பேட்டிகளில் அவரது பேச்சுக்களை பதிவு செய்துள்ளனர்.
கண்ணாடி முன்னால் நிற்கும் போது, அதில் தெரியும் என் உருவத்தைப் பார்த்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன் நான். ஆனால் பல கருப்பின மக்கள் தாங்கள் கருப்பாக இருப்பதை விரும்புவதில்லை.
சின்னச் சின்ன கருப்பினச் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கூட வாழ்க்கையில் நல்ல முன்மாதிரிகள் இல்லை. நாங்கள் காணும் நாயகர்கள் எவருமே எங்களைப் போல இல்லை.
இயேசு கிறிஸ்துவைக் கூட வெள்ளையாகத்தான் வரைந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து கடவுளின் புதல்வர் என்று எங்களுக்குப் போதித்திருக்கிறார்கள். அப்படியென்றால், ஒருவேளை கடவுளும் கூட வெள்ளையாகத்தான் இருப்பாரோ என்னவோ என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
இயேசு கிறிஸ்து எப்போதுமே நீண்ட தங்கநிற முடி உடையவராகவும், நீல விழிகள் கொண்டவராகவுமே காட்டப்பட்டிருக்கிறார். படங்களில் உள்ள தேவதைகள் கூட வெள்ளையாகவே இருப்பதைக் கவனித்தேன். கருப்பு தேவதைகள் இருப்பது போல எந்தப் படமும் இல்லை. இதனால் ஒரு நாள் என் அம்மாவிடம் கேட்டேன். “நாம் இறந்த பிறகு
என்ன ஆவோம்? சொர்க்கத்துக்குப் போவோமா?
“கண்டிப்பாக சொர்க்கத்துக்குத் தான் போவோம்” என்று அம்மா சொன்னார்கள்.
நான் கேட்டேன், “அப்படியானால் படம் வரையும் போது கருப்பு தேவதைகள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?
ஓ! எனக்குத் தெரியும். வெள்ளைத் தேவதைகள் சொர்க்கத்துக்குப் போகையில், கருப்புத் தேவதைகள் எல்லாம் சமையல் அறையில் பாலும் தேனும் தயாரித்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.
அதெல்லாம் சரிதான். தேன், பாலெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை. எனக்குச் சில பதில்களே வேண்டும். நல்லவை எல்லாம் ஏன் எப்போதுமே வெள்ளையாகக் காட்டப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
ஒரு சமயம், ஹாலோவீன் திருநாள் கொண்டாட்டத்தின் போது மாறுவேட உடையணியும் நிகழ்ச்சியில் எங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு கருப்புச் சிறுமி சூப்பர் ஹீரோ உடுப்புகளைப் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் முகத்தில் மட்டும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
நான் ஏன் என்று கேட்ட போது, கருப்பு சூப்பர் ஹீரோ என்று யாரும் இல்லை என தனது அக்கா சொல்லியிருப்பதாகச் சொன்னாள். அவள் சொன்னது சரிதான். டிவியில் காட்டப்படும் எல்லாரும் வெள்ளையாகவே இருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ வெள்ளையாகத்தான் காட்டப்படுகிறார். சான்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) வெள்ளையாகத்தான் காட்டப்படுகிறார்.
ஏன், ஆப்பிரிக்கக் காட்டு ராஜா டார்ஜான் கூட வெள்ளையாகவே காட்டப்படுகிறார். நானும் கவனித்தேன், மிஸ் அமெரிக்கா எப்போதுமே வெள்ளையாகத்தான் இருக்கிறார், வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபர் கூட வெள்ளையாகத்தான் இருக்கிறார்.
நல்லதாக இருக்கும் எதுவுமே எங்களின் – கருப்பர்களின் - பிரதிபலிப்பாக இல்லை. அந்த இளம் பிராயத்திலேயே சில விஷயங்கள் மிகவும் தவறாக இருப்பதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது, ஆனால் ஏன் என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் தோலின் நிறம் அழகானது என்று பெருமிதப்பட்டேன்.
ஆனால் கருப்பாக இருக்கும் எல்லாமே கெட்டதாகவும், விரும்பத்தகாததாகவுமே கருதப்பட்டது. கருப்புப் பூனைகள் துரதிருஷ்டத்தின் குறியீடாகச் சொல்லப்படுகிறது.
பேய்கள் உண்ணும் கேக்கும் கூட கருப்பாக இருக்கிறது, தேவதைகள் சாப்பிடும் கேக்கோ வெள்ளையாக இருக்கிறது. இவை யாவும் சிலவற்றை நுட்பமாகப் புலப்படுத்துபவையாக இருக்கிறது, ஆனாலும் அவை ஏற்படுத்தும் பாதிப்போ பெருவீச்சு கொண்டது. இவை தாம், ஒவ்வொரு நாளும், நானும் மற்ற வெள்ளையர் அல்லாத சிறுவர்களும், எங்களைப் பற்றி நாங்கள் கண்ட பிம்பங்களை உருவாக்கின.
எப்படி என்று தெரியவில்லை, ஆனால் என் மக்களுக்கு நான் உதவப்போகிறேன் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். ஏதோ ஒரு வகையில் இவ்வுலகில் நான் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணப் போகிறேன்.
மேலும் மேலும் அநீதியைக் காணும் போது, அதற்கெதிராக என் உணர்வுகள் இன்னும் இன்னும் வலுப்பெறுகின்றன. ஒரு காரணத்திற்காகத் தான் இங்கே வந்து பிறந்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன் நான்.