Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலூனாகப் பறக்கும் மக்கள் வரிப்பணம்

பலூனாகப் பறக்கும் மக்கள் வரிப்பணம்
, வியாழன், 9 செப்டம்பர் 2010 (12:06 IST)
மக்கள் வரிப்பணத்தை எப்படி பலூனாகக் காற்றில் பறக்க விடமுடியும் என்று சந்தேகம் கொள்பவர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து வரும் செய்திகளைத் தொடர்ந்து படித்தால் விளங்கும்.

ஆம்! துவக்க விழாவில் ரூ.70 கோடி செலவில் கலர் பலூன்களை ஒளிவெள்ளத்தில் பறக்கவிட்டுக் காட்சிக் குதூகலம் படைக்கவுள்ளனர் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பினர்.

மைதானங்கள் இன்னும் தயாராகவில்லை, கட்டுமானப்பணிகளில் இழுபறி, ஊழல், தரமின்மை, இந்திய வீரர்கள் பிடிபடும் தொடர்ந்த ஊக்க மருந்து விவகாரம், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல், முக்கிய நாடுகள் பங்கேற்பதில் சந்தேகம், பங்கேற்றாலும் நட்சத்திர வீரர்கள் அல்லாது வீரர்களேயல்லாத அமெச்சூர்கள் பங்கேற்கும் நிலை. இத்தனை தடைகளையும் மீறி, மழை கொட்டப்போகும் சாத்தியங்களும் உள்ள நிலையில் ரூ.70 கோடி செலவழித்து பலூன் விடவேண்டுமா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

நீங்கள் என்னவேண்டுமானாலும் கேட்கலாம், அதெல்லாம் உரியவர்கள் காதில் விழுந்தால்தானே? நாட்டின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 37% மக்களுக்கு பண்டகசாலைகளில் போதிய பராமரிப்பில்லாமல் வீணாகும் உணவு தானியங்களை இலவசமாக வழங்குங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதனை ஏதோ ஜோக் போல பாவித்து வரும் நம் பிரதமர், நம் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஒரு கேவலமான கூற்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ரூ.70 கோடி கொடுத்து வறுமையில் உழலும் மக்களுக்கு பலூன் கண்காட்சிக் காண்பிக்க காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு முடிவெடுத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த 'ஏரோஸ்டாட்'-ஐ பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளனர். இதன் கட்டணம் ரூ.40 கோடிதான்.

ஆனால் இந்தப் பலூன் கண்காட்சியை சிறப்பாக அமைக்கப் பயன்படும் நிர்மாணங்கள் அல்லது உபகரணங்கள் ரூ.30 கோடி வரை செலவு வைக்கும் பொருட்களாகும். இன்னும் இரண்டு நாட்களில் இந்த பலூன் கண்காட்சி சோதனை ஓட்டம் காணவுள்ளது.

துவக்க விழா செலவினங்களை பரிசீலித்து (!) முடிவெடுக்கின்றனர். ஆனால் போட்டிகள் நடைபெறுவதற்கான பணிகள் நிறைவேறியதா? அல்லது அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்ற முடியுமா? என்ற கேள்விகள் இருக்க, அதற்கு அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிபோல் மாறி மாறி உறுதி அளித்து வருகின்றனர் அமைப்பாளர்கள்.

விளையாட்டு மைதானங்கள் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. எந்த ஒரு பகுதியிலும் நிலுவையில் உள்ள பணிகள் அதிகாரிகளைக் கவலையடையச் செய்துள்ளது. போட்டிகளுக்கென்று உருவாகிவரும் கிராமங்களில் கோபுரப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

முக்கியத் தடகள வீரர்கள் பங்கேற்கும் நீச்சல் குளம் இன்னமும் முடிந்தபாடில்லை. கட்டுமானப்பணிகளால் விளைந்த கட்டிட இடிபாட்டுப் பொருட்கள் விளையாட்டு அரங்கின் பகுதிகளில் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. இதனை அகற்றவே ஒரு காமன்வெல்த் போட்டித் தொடர் நடத்த வேண்டியிருக்கும்.

வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெறும் திறந்த வெளி அரங்குகளில் மழை நீர் தேங்கி பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

மேலும் இந்தப் போட்டித் தொடருக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப்பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் இது முடிவடையும் என்பதற்கான அற்குறிகளும் இருப்பதாகத் தெரியவில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மழையும், சாலைப் பணிகள் நடைபெறும் வேகமும் தரத்தை பாதித்துள்ளன. சாலைகள் இதனால் விரிசல் விடுவதுடன் மேற்புறங்கள் சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் உள்ள நிலையில் காமன்வெல்த் ஒரு தேச கௌரவம் என்பது போன்ற கருத்துருவாக்கம் செய்வது தமாஷாக உள்ளது.

மத்திய அமைச்சர் மணி சங்கர ஐயர், 'காமன்வெல்த் போட்டிகளின் போது நல்ல வேளையாக நான் இந்தியாவில் இருக்கமாட்டேன்' என்று கூறியுள்ளது நாம் மேற்கூறிய தமாஷுடன் இணைத்து நோக்கத்தக்கது.

அவர் பணம் படைத்தவர்... இந்தக் கொடுமையைப் பார்க்கப் பிடிக்காமல் வெளிநாடு செல்கிறார். நமக்குத்தான் போக்கிடம் இல்லையே!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் இதனை காமன்வெல்த் கேம் என்று அழைப்பதை விட காமன்வெல்த் ஷேம் என்று அழைப்பதே உகந்தது என்று சிந்திக்கத் தூண்டுகிறது.

இவ்வளவு பிரச்சனைகளையும் மூடிமறக்க இப்போது பலூன் விளையாட்டு வேறு!

Share this Story:

Follow Webdunia tamil