Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் கொண்டாட்டமாக நடைபெற்ற மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!

Isha Gramatsav

Prasanth Karthick

, திங்கள், 9 டிசம்பர் 2024 (10:19 IST)

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு, மண்டல அளவிலானப் போட்டிகள் கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (08/12/2024) நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை கலைஞரும் நடிகருமான ரக்‌ஷன் பங்கேற்றார்.

 

 

ஈஷா சார்பில் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. 

 

இந்த விளையாட்டுப் போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. மொத்தம் 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் 5,000 அணிகளில் 43,000 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர்.  இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இரண்டாம் கட்டமாக மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் 6 இடங்களில் நடைபெற்றது. கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர். 

 

webdunia
 

கோவை மண்டலத்தில் நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து 311 அணிகள் கிளஸ்டர் அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் இருந்து மொத்தம் 22 அணிகள் தேர்வாகி, கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான வாலிபால் மற்றும் த்ரோபால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். 

 

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளின் முடிவில் நஞ்சுண்டாபுரம் அணியினர் முதலிடத்தையும், ஈரோடு IVSC அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். மேலும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளின் முடிவில் புல்லாக்கவுண்டன் புதூர் அணியினர் முதல் பரிசையும், தேவராயபுரம் அணியினர் இரண்டாம் பரிசையும் பெற்றனர். 

 

திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதே போல் திருநெல்வேலியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் அவர்களும், வேலூரில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 

 

இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான பொள்ளாச்சி கலை குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சியும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்களின் சிலம்பம் நிகழ்ச்சியும், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற படுகர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

 

மேலும் பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சிகளை வெகுவாக கண்டு ரசித்தனர். 

 

மேலும் மண்டல அளவிலான போட்டிகளில் தேர்வான அணிகள், கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள  தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.  

 

கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது. 

 

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி வேறுபாடுகளை  தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பும்ராவுக்கு ஓய்வளிக்கக் கூடாது… அவர்தான் எல்லாமே- சுனில் கவாஸ்கர் கருத்து!