Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக் மற்றும் தெற்காசிய போட்டிக்கு தமிழக மாணவர்கள் தகுதி

Advertiesment
ஒலிம்பிக் மற்றும் தெற்காசிய போட்டிக்கு தமிழக மாணவர்கள் தகுதி
, சனி, 4 ஜூன் 2016 (12:27 IST)
அமெரிக்கா, துபாய் மற்றும் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று தமிழக மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். பிரேசிலில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தமிழக மாணவர் தேர்வாகி உள்ளார்.


 

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ‘சர்வதேச பார் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள்’ துபாயில் நடைபெற்றன. ‘ஆசியா ஒசானியா சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் நடந்த போட்டியில், 63 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழக மாணவர் மனோஜ் கலந்து கொண்டு, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இவர் தகுதி பெற்றுள்ளார்.

சென்னையிலுள்ள எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் இதற்கான ஏற்பாடுகளைச்செய்திருந்தது. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்றனர். இந்த மையத்தின் மூலமாக, டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். டெல்லியிலுள்ள தல்கோத்ரா உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

webdunia

 


இதில், ‘குமிட்டி’ என்னும் கராத்தே சண்டை பிரிவில் கணேஷ் மற்றும் அஷ்வினி தங்கப் பதக்கங்களை வென்றனர். மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய கராத்தே சாம்பியன்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கு பெறவும் தகுதி பெற்றுள்ளனர். பயிற்சியாளர் கியோஷி சேகர் இருவருக்கும் பயிற்சியளித்து வருகிறார். சர்வதேச அளவிலான மற்றொரு கராத்தே போட்டியில் தமிழக மாணவர் அரவிந்த பாபு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 40 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டி, அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்றது. ‘யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியின், ஜீனியர் பிரிவில் அரவிந்தபாபு இப்பதக்கம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த யாமினி மற்றும் ஸ்ரீவர்ஷா ஆகியோரும் இதே போட்டியில் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

சென்னை எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கான செலவுகளையும் (ஸ்பான்சர்ஷிப்) எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பல சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இந்நிறுவனம், வரும் காலத்திலும் சர்வதேச அளவில் பல வெற்றியாளர்களை உருவாக்க, மாணவர்களைத் தயார்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.




Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குத்துச்சண்டை போட்டிகளின் முடிசூடா மன்னன் ’தி கிரேட்’ முகமது அலி மரணம்