2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி 20 உலகக்கோப்பைப் போட்டிகளில் நேரடியாகப் பங்கேற்கும் அணிகள் பட்டியலில் இலங்கையும் வங்கதேசமும் இடம்பெறவில்லை.
ஐசிசி கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான டி 20 அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை 9 வது இடத்திலும் வங்கதேசம் 10 ஆவது இடத்திலும் இருக்கின்றன. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் நேரடியாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதால் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி 20 போட்டித் தொடரில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை இவ்விரு அணிகளும் இழந்துள்ளன. அதனால் இரண்டு அணிகளும் இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் தகுதி சுற்றுப்போட்டிகளில் விளையாடி அதில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து தகுதிப் பெற்றால்தான் உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொள்ள முடியும்.
2014 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெற்றி பெற்று சாம்பியனாகவும் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பெருமைக்குரியது இலங்கை அணி. அந்த அணி நேரடியாக தகுதிப் பெறாமல் போனது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளாக பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஆப்கானிஸ்தான் இந்த ஆண்டுதான் முதல்முறையாக நேரடியாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.