ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு இந்த ஆண்டே ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஆகஸ்டு மாதம் 5ம் தேதி முதல் 21 வரை நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்காக மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டியதில்லை.
இந்த ஆண்டே விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முன்பு பெறவில்லை எனில் உடனடியாக அந்த விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
இதே போல் அணிகள் பிரிவில் பதக்கம் வெல்லும் போது, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்து ஜொலித்த வீரர் யார்? என்பது பார்க்கப்படும். அத்தகைய வீரர் முன்பு அர்ஜூனா விருது பெறவில்லை என்றால், அவரது பெயர் அந்த விருதுக்கு பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு இந்த ஆண்டே ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.