ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து நேற்று தொடங்கிய நிலையில் கத்தார் அணி ஜெயிக்க லஞ்சம் கொடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. நேற்று கோலாகலமாக ஃபிஃபா உலகக்கோப்பை தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் தொடக்கமாக கத்தார் – ஈக்குவடார் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஈக்குவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக கத்தார் அணி லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுதி அரேபியாவின் பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குனர் அம்ஜத் தாஹா “கத்தார் நாடு தங்களுக்கு எதிரான போட்டியில் ஈக்குவடார் தோற்க வேண்டும் என எட்டு கால்பந்து வீரர்களுக்கு 7.4 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்ததாக ஐந்து கத்தார் நாட்டினரும், ஈக்வடார் நாட்டினரும் உறுதி செய்துள்ளனர்.
இது தவறான தகவல் என்று நாங்கள் நம்புகிறோம். அதேசமயம் இதை பகிர்வது பிபா ஊழலை எதிர்க்க வேண்டும் என்பதால்தான்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பையை கத்தாரில் நடத்த கத்தார் ஃபிஃபா அமைப்புக்கு லஞ்சம் கொடுத்ததாக சர்ச்சைகள் உள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.