ஐபிஎல் போல இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் எல் பி எல் தொடரில் இருந்து பல வீரர்கள் விலகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை ஆரம்பித்து பணமழைக் கொட்ட ஆரம்பித்ததும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அது போல பிரிமியர் தொடர்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதில் எதிலும் இந்திய வீரர்கள் கலந்துகொள்வதில்லை. அதற்கு பிசிசிஐ அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் அதில் கலந்துகொள்ளலாம்.
அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர்களான இர்பான் பதான் மற்றும் மன் பிரீத் சிங் கோனி ஆகியோர் இலங்கையில் நடக்கும் லங்கா பிரிமீயர் லீக்கில் கலந்துகொள்ள இலங்கை சென்றுள்ளனர். அங்கே அவர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்போது தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல், லசித் மலிங்கா, ரவி போபரா, லியம் பிளங்கட், சர்ஃபராஸ் அஹமது ஆகிய வெளிநாட்டு வீரர்கள் வெவ்வேறு காரணங்களால் எல்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதையடுத்து தொடரை தொடங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ள்ன. ஏற்கனவே நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கும் எல் பி எல் தொடருக்கு வீரர்களின் விலகல் மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.