பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து தேசிய கொடி ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இந்த ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ம்தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்திய அணியில் 17 வீரர்கள், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இதில் 5 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா மீண்டும் இந்த ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குகிறார்.
இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
ஆனால் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், இந்த கவுரவமிக்க பொறுப்பில் தன்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மேரி கோம் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில், பேட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்து தேசியக்கொடி ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுடன் இணைந்து பி.வி சிந்து தேசியக்கொடி ஏந்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.