உலகம் முழுவதும் கொரோனா பீதியால் மக்கள் முடங்கியிருக்கும் சமயத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற இருக்கிறது. ஜூலை 24ம் தேதி தொடங்கி நடைபெறும் இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெற உள்ளனர்.
உலகம் முழுவதிலும் தற்பொது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டியின் தாயகமான கிரீஸ் (கிரேக்கம்) நாட்டில் உள்ள அக்ரோபொலிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வில் கிரேக்க நடிகை ஸாந்தி ஜியார்ஜியாவ் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். 7 நாட்கள் தொடர் ஓட்டமாக கிரீஸ் முழுவதும் கொண்டு செல்லப்படும் இந்த ஜோதி 19ம் தேதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.