கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனாவை தாண்டியும் ஒலிம்பிக் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. கிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட்டு ஜப்பானில் ஏற்றப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் முன்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புவதாய் ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாக குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் குழு அதிகாரி ஒருவர் பேசிய போது ”ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் பலநாடுகள் வீரர்கள் முழுமையாக அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சிக்கலானது. எனினும் ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஒலிம்பிக் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்க உலக நாடுகள் சில ஜப்பானிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.