இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நேற்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் போட்டிகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கிறோம் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் அவர்கள் தெரிவித்தார்.
உடனடியாக போட்டிகளை தொடங்க முடிந்தால், போட்டி நடைபெறும் இடங்கள், தேதி உள்ளிட்டவற்றை திட்டமிட வேண்டும் என்றும், அணியின் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் இது குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போட்டிகளை இந்தியாவிலேயே நடத்துவதா? அல்லது வெளிநாட்டில் நடத்துவதா? என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடத்துவது என்றால், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என தென் மாநிலங்களை மட்டும் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் போட்டிக்காக வரவழைத்து ஒருங்கிணைப்பு பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.