ஒரு சில ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் மட்டுமே சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டித்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. அவ்வாறு இருக்கும் போது பாகிஸ்தான் சென்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவது என்பது இப்போதைக்கு கனவில் கூட நடக்காத ஒன்றாக கருதப்படுகிறது
இந்த நிலையில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது
வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் சொல்லவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் இந்திய டென்னிஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து விளக்கமளித்த இந்திய டென்னிஸ் சங்கம், 'டேவிஸ் கோப்பை என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் ஒரு தொடர் அல்ல என்றும், இது உலக அளவிலான போட்டித் தொடர் என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
ஆனாலும் இந்த விளக்கத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளாமல் இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்ல கூடாது என்று என்று கூறி வருகின்றனர். இந்த தொடர் ஆரம்பிக்க இன்னும் சுமார் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் அதற்குள் ஏதேனும் மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்