நியுசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இன்று தொடங்கிய நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியைப் போல அல்லாமல் இந்த போட்டியில் இந்தியப் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் நியுசிலாந்து அணி அதிரடியாக விளையாடாமல் நிதானமாக விளையாடியது.
நியுசிலாந்து வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவுட் ஆகி வெளியேற ராஸ் டெய்லர் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 42 ரன்களில் ஆவுட் ஆகி வெளியேற கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 50 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக நியுசிலாந்து. 20 ஓவர்கள் முடிவில்8 விக்கெட்களை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குருனால் பாண்ட்யா 4 ஒவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். கலீல் அகமது 2 விக்கெட்களையும் சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதையடுத்து 159 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் தவான் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா 50 ரன்களில் ஆட்டமிழக்க, தவான் 30 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ரிஷப் பாண்ட் அதிரடியாக விளையாட அவருக்கு உறுதுணையாக விஜய் சங்கரும் உதவினார், விஜய் 14 ரன்களில் அவுட் ஆக அதன் பின் தோனி பண்ட்டோடு ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாட இந்தியா 18.5 ஓவர்களில் 162 ரன்களை சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்துள்ளது.