இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் ஓரளவுக்கு பொறுப்பாக விளையாடிய 45 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
இதனை அடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும் திலக் வர்மா மிக அபாரமாக விளையாடி கடைசி வரை அவுட் ஆகாமல் 72 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து இந்தியா 19.2 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஏற்கனவே ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.