ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில், இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து, 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடிய நிலையில் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்கள் எடுத்தார் என்பதும், மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு புள்ளிகளை பெற்ற நிலையில், இலங்கை மற்றும் இந்திய அணிகள் புள்ளிகள் எதுவும் பெறவில்லை என்பதும், ஆஸ்திரேலியா அணி இன்னும் ஒரு போட்டி கூட விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.