இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கொடுத்த 305 ரன்கள் என்ற இலக்கை வெறும் 44.3 ஓவர்களில் எட்டி, இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 65 ரன்கள், ஜோ ரூட் 69 ரன்கள், அடித்தனர்.
305 என்ற இமாலய இலக்கை எட்டுவதற்காக களம் இறங்கிய இந்திய அணி, கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 44.3 ஓவர்களில் 308 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார். இதில் ஏழு சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் 60 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இரண்டிலும் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது. நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.