இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் களமிறங்கக்கூடும் என்ற செய்தி கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஹர்பஜன் சிங்கை பிசிசிஐ தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக 367 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர் ஹர்பஜன் சிங். கிரிக்கெட்டைத் தாண்டி, அரசியல் மற்றும் பொது வாழ்விலும் ஹர்பஜன் சிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் அதிகாரி ஏ.கே. ஜோதி வெளியிட்ட அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் செப்டம்பர் 22-ஆம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 23. அன்றைய தினமே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
தலைவர் பதவிக்கான தேர்தல் தவிர, துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த பதவிகளுக்குப் போட்டி இருக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று வதந்திகள் பரவின. ஆனால், சச்சின் தரப்பு அந்த வதந்திகளை மறுத்தது. தற்போது ஹர்பஜன் சிங் அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்வாரா என்பது வரும் நாட்களில் தெளிவாகும்.