கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருப்பதால் தோனி இனி இந்திய அணியில் சேர்வது கடினம் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலக கோப்பையில் பங்கேற்ற தோனி அதில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு கடந்த ஓராண்டு காலமாக எந்த போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இணைய தோனி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கும் ரத்தாகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி. தெரிவித்துள்ளார். இதனால் தோனியின் இந்திய அணி பிரவேசம் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் ”கடந்த ஓராண்டாக விளையாடாமல் இருக்கும் தோனியால் எந்த வகையில் இந்திய அணிக்கு தகுதி பெற முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “லோகேஷ் ராகுல் தோனிக்கு பதிலாக சிறந்த வீரராக இருக்கிறார். விக்கெட் கீப்பிங்கில் தோனி அளவுக்கு அவரால் செயல்பட முடியாவிட்டாலும் டி20 தொடர்களில் சரியான தேர்வாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பிறகு அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி கலந்து கொண்டாலும் இனி அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது.