Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்

Advertiesment
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்
, வியாழன், 12 ஜூன் 2014 (18:33 IST)
இந்த பூமிப் பந்தில் அதிகம் பேர் ரசிக்கும் விளையாட்டுத் திருவிழா என்றால் அது உலகக் கோப்பை கால்பந்து போட்டியாகதான் இருக்கும். 1930 -ல் ஆரம்பமான இந்த போட்டி உலகப் போர் காரணமாக இரண்டுமுறை தடைபட்டது. இன்று 20 -வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான பிரெசிலில் ஆரம்பிக்கிறது. அதன் தொடக்கவிழா இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு பிரெசிலின் அழகிய நகரங்களில் ஒன்றான சாவோ பாவ்லோ நகரில் நடக்கிறது. அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸின் ஆட்டம் பாட்டத்துடன் தொடக்கவிழா களைகட்டவிருக்கிறது.
கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடந்தன. ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. ஐரோப்பிய அணிகளுக்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் கால்பந்து விளையாட்டை கொண்டாடும் விதத்தில் பெரிய வித்தியாசங்கள் உண்டு. தென் அமெரிக்க நாட்டவர்களுக்கு கால்பந்து ஒரு விளையாட்டல்ல, அது அவர்களின் மதம்.

கால்பந்தாட்ட வீரர்கள் வீரர்களல்ல அவர்களின் கடவுள்கள். பீலேயும், மாரடோனாவும் இன்றளவும் அவ்வாறே பார்க்கப்படுகிறார்கள். உலக்கோப்பை கால்ந்து போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளுக்கு வெளியே அதிகம் பேரால் கொண்டாடப்படும் அணிகளாக பிரெசிலும், அர்ஜென்டினாவும் இருப்பதற்கு இதுவே காரணம். இந்தமுறை போட்டிகள் பிரெசிலில் நடப்பதால் ஆறாவது முறையாக அவ்வணி கோப்பையை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ஆதரவும், இந்த எதிர்பார்ப்பும்தான் அந்த அணியின் மகத்தான பலம். 
 

உலகக் கோப்பை போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இவை மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் நான்கு நாடுகள். ஒரு பிரிவில் இடம்பெற்றுள்ள அணி மீதமுள்ள மூன்று அணிகளுடன் தலா ஒருமுறை லீக் சுற்றில் மோதும். அதிக புள்ளிகளுடன் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
webdunia
ஏ பிரிவில் பிரெசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன் ஆகிய அணிகளும்
 
பி பிரிவில் ஸ்பெயின், சிலி, ஆஸ்ட்ரேலியா, நெதர்லாந்த் ஆகிய அணிகளும்
 
சி பிரிவில் கிரீஸ், கொலம்பியா, ஜப்பான், ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகளும் 
 
டி பிரிவில் உருகுவே, இத்தாலி, இங்கிலாந்த், கோஸ்டரிகா ஆகிய அணிகளும்
 
இ பிரிவில் ஈக்வடார், ஹோண்டுராஸ், பிரான்ஸ், சுவிட்சர்லாந்த் ஆகிய அணிகளும்
 
எஃப் பிரிவில் அர்ஜென்டினா, ஈரான், போஸ்னியா ஹெர்சகோவா, நைஜீரியா ஆகிய அணிகளும் 
 
ஜி பிரிவில் ஜெர்மனி, கானா, போர்ச்சுக்கல், அமெரிக்கா ஆகிய அணிகளும்
 
எச் பிரிவில் அல்ஜீரியா, பெல்ஜியம், ரஷியா, தென் கொரியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
 

இன்றைய தொடக்கவிழா கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஏ பிரிவைச் சோந்த பிரெசிலும், குரோஷியாவும் மோத உள்ளன. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறும். பிரெசில் நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினாலும் குரோஷியா அதற்கு பெரும் சவாலாக இருக்கும். 
webdunia
உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரெசிலின் ஆறு முக்கிய நகரங்களில் நடக்கின்றன. இன்று தொடங்கி அடுத்த மாதம் 13 -ம் தேதிவரை நடக்கயிருக்கும் கால்பந்து திருவிழாவை முன்னிட்டு பிரெசில் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாலியல் தொழில் முதல் பந்தயம் கட்டுதல்வரை அனைத்தும் உச்சத்தை எட்டியுள்ளது. மைதானத்துக்குள் நடக்கும் விளையாட்டுகளில் யார் ஜெயிப்பார்கள் என்ற போட்டி மைதானத்துக்கு வெளியே சூடு பிடித்துள்ளது. சென்றமுறை எந்த அணி ஜெயிக்கும் என்பதை துல்லியமாக கணித்த பால் ஆக்டபஸ் இறந்துவிட்டதால் ஆமை, யானை என ஒரு விலங்குப் பட்டாளத்தையே வெற்றி பெறும் அணி எது என்பதை கணிக்கும் பந்தயத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.
 
இந்திய கால்பந்து ரசிகர்களைப் பொறுத்தவரை இனி வரும் ஒரு மாதமும் தூக்கமில்லா இரவுகள். இந்த தொண்ணூறு நிமிட யுத்தத்தைப் பார்க்க தூக்கத்தை தொலைக்க ரசிகர்களும் தயாராகவே உள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil