இங்கிலாந்து வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்துக்கொண்டு இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
ஆஷிஸ் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணி வீரர்களால் பிரச்சனை தொடங்கியது. வெண்ட் இண்டீஸ் அணியுடன் நடைப்பெற்ற ஒருநாள் தொடரின்போது பென் ஸ்டோக்ஸ் வாலிபரை தாக்கி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆஷிஸ் தொடரிலும் விளையாடும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷிஸ் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் பேர்ஸ்டோவ் மதுபோதையில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப் உடன் தலையை வைத்து மோதியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விஷயம் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் பாருக்குச் சென்றபோது பென் டக்கெட் என்பவர் சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மது ஊற்றியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டக்கெட் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களில் செயல் குறித்து மொயீன் அலி கூறியதாவது:-
கிரிக்கெட் விளையாடும் இளம் வீரர்கள் இதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அனைத்து செய்திகளையும் அறிவார்கள். இதனால் நம்முடைய சிறந்த பழக்க வழக்கங்களை வெளிப்படுத்துவது முக்கியமானது. போட்டிகளில் எப்படி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இளம் வீரர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தேவையில்லாத விஷயங்கள் அவர்களை திசை திருப்ப வாய்ப்பாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.