மத்திய அரசின் கவன குறைவால் தமிழக வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம்.
உலக பள்ளிகள் இடையிலான விளையாட்டுப் போட்டி துருக்கியின் டிராப்ஸான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 149 வீரர், வீராங்கனைகளும், 38 அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் அந்நாட்டு அதிபருக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு புரட்சியில் இறங்கினர். இதையடுத்து அதிபரின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தமிழகம் சார்பாக போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்கள். இருப்பினும் நான்கு தமிழக வீரர்களால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் போட்டியின் விதிமுறைகளுக்கு உகந்த ஆடை அணியாததால் டிராக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு, போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அதன் சட்டத்திட்டங்கள் தெரியாமல் இருந்ததால் மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம் என அந்த மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நாளை சென்னை திரும்புகிறார்கள்.