ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பனாமா அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையில் இன்னொரு ஆட்டத்தில் போலந்து அணியை கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
நேற்று போலந்து-கொலம்பிய அணிகளுக்கு எதிரான போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்தில் ஒரு கோல், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்தில் ஒரு கோல் என அடித்ததால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை போலந்து அணியால் ஒரு கோல் கூட போட முடியாததால் இறுதியில் கொலம்பிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
இதேபோல் நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.