வங்கதேசம் ‘சாதாரண டெஸ்ட் அணி’ என சிட்டகாங் டெஸ்ட் கிரிக்கெட் துவங்குவதற்கு முன்பாகத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை, போட்டி நிறைவடைந்த பின்னரும் சேவாக் நியாயப்படுத்த முயன்றுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி இலக்கான 415 ரன்களை எட்டவில்லை என்ற போதிலும், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து 2வது இன்னிங்சில் வங்கதேச கீப்பர் முஷிஃபூர் ரஹீம் 102 ரன்கள் குவித்தார்.
இதே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கடைநிலை வீரர்களின் உதவியுடன் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அடித்த 44வது டெஸ்ட் சதத்திற்கு திறமை அளவில் சற்றும் குறைவில்லாத சதத்தை முஷிஃபூர் ரஹீம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பேட்டிங்கில் அசுர பலம் கொண்ட அணியாக உலகளவில் கருதப்படும் இந்திய அணியை முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு வங்கதேசம் சுருட்டியதும் நினைவில் கொள்ளத்தக்கது.
இதற்கிடையில், வங்கதேசம் ‘சாதாரண டெஸ்ட் அணி’ என்ற கருத்தை வெளியிட்ட சேவாக்கிடம் அதுகுறித்து வங்கதேச செய்தியாளர்கள் போட்டி முடிந்த பின்னர் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய சேவாக் தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக, “வங்கதேச பேட்ஸ்மென்கள் 2 இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை முதல் இன்னிங்சில் மட்டுமே சிறப்பாக வீசினர்” எனக் கூறியுள்ளார்.