லால்ட்ஸில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் மழை காப்பாற்றியதால் தோல்வியிலிருந்து தப்பிய இந்திய அணி, தனது மோசமான ஆட்டத்திற்கான காரணத்தை அலசியிருக்கும் என்று நம்பலாம்!
இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இருந்த வித்தியாசம் என்னவென்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தால், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பான துவக்கத்தைப் பெற்று முதல் நாள் ஆட்டத்தில் நல்ல வேகத்தில் ரன்களைக் குவித்தது என்பது தெரியவரும்.
2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் அருமையான வீச்சிற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், இந்திய அணியை 201 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தததன் வாயிலாக முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் வித்தியாசத்தைப் பெற்றதே அந்த அணியின் பலமான நிலைக்கு காரணமாக அமைந்தது.
இரண்டு அணிகளுமே மிகச் சிறப்பாக பந்து வீசின. ஆனால், முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதால் இங்கிலாந்து பலமான நிலையை எட்டியது. முதல் இன்னிங்ஸில் மோசமாக விளையாடியதால் இந்திய அணி பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியும் தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடியது. மழை வந்திருக்காவிட்டால் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும் இந்திய அணி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாகவே முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக ஆடி ரன்களைக் குவிக்கும் அணியே வாகை சூடியுள்ளது. இரண்டு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி ரன் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லாத போதெல்லாம், டெஸ்ட் போட்டிகள் வெற்றி-தோல்வியின்றிதான் முடிந்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் இந்திய அணியின் பேட்டிங் மிகப் பெரிய சவாலாக இருந்தது. சிட்டினியில் இருந்து பிரிஸ்பேன் வரை 4 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. பெர்த் டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, பிறகு மளமளவென்று விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆஸ்ட்ரேலிய அணி 500க்கும் அதிகமாக ரன்களைக் குவித்து அந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
ஆனால், அடுத்ததாக மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியா முதல் இன்னிங்ஸில் 500க்கும் அதிகமாக ரன்களைக் குவித்தது. பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியும் 500 ரன்களைத் தாண்டியது. முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் அதிகம் பெற்றிருந்த ஆஸ்ட்ரேலிய அணி, அதிரடியாக ஆடி ரன் குவிக்க முயன்று 196 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 4வது இன்னிங்ஸில் 230 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபரீதமாக ரன்களைக் குவித்தது. அதனால்தான் ஆஸ்ட்ரேலிய அணி மிகவும் திணறியது. ஒவ்வொரு முறையும் 150 முதல் 200 ஓவர்கள் வரை முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி ஆடியதால் ஆஸ்ட்ரேலிய அணியால் நெருக்க முடியவில்லை. இந்த அணுகுமுறைதான் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாகும். பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கினாலும் சரி, எதிரணியை இறக்கிவிட்டு பிறகு ஆடினாலும் சரி, முதல் இன்னிங்ஸில் குறைந்தது 120 முதல் 140 ஓவர்கள் விளையாடி 450க்கும் அதிகமாக ரன்களைக் குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிரணிக்கு நெருக்குதல் ஏற்படுவது மட்டுமின்றி, நமது பந்து வீச்சாளர்களுக்கும் அழுத்தமின்றி பந்து வீசக்கூடிய சுதந்திரம் கிடைக்கும்.
இதனை சாதிக்க சரியான துவக்க ஆட்டக்காரர்கள் தேவை. ஆஸ்ட்ரேலிய பயணத்தின்போது அதிரடியாக ஆடக்கூடிய வீரேந்திர சேவாக்கும், அருமையாக நின்றாடக்கூடிய ஆகாஷ் சோப்ராவும் இருந்தனர். இன்று அப்படிப்பட்ட துவக்க இணை இந்தியாவிடம் இல்லை. எனவே, அடுத்து வரக்கூடிய ராகுல், சச்சின், செளரவ், ஆகியோருக்கு அதிகப்படியான சுமை விழுகிறது. அதனால் அவர்களால் தங்களுடைய திறனை சுதந்திரமாக வெளிப்படுத்த இயலாமல் போகிறது.
அவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில் துவக்க இணை சிறப்பானதாக இருக்க வேண்டும். அதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
வீரேந்திர சேவாக்கிற்கு இணையான துவக்க ஆட்டக்காரர் இப்போதைக்கு இந்தியாவில் இல்லை. அவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும். தினேஷ் கார்த்திற்கு அனுபவம் வேண்டும். சேவாக் மறுமுனையில் ஆடினால் துவக்க ஆட்டக்காரருக்கான நெஞ்சுரத்தையும், நிலைத்து நின்றாட வேண்டிய அனுபவத்தையும் இளைய வீரரான கார்த்திக் பெறுவார்.
எனவே, இந்திய அணியின் பலத்தை உறுதி செய்ய அழைக்க வேண்டும் சேவாக்கை!