வங்கதேச அணியின் வெற்றிக்குப் பின்னால் உழைப்பும், கடினமான பயிற்சியும்
, திங்கள், 18 அக்டோபர் 2010 (12:45 IST)
நியூஸீலாந்து அணிக்கு எதிராக வங்கதேச கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான வீரர்கள் பங்கு பெறும் ஒரு முழுமையான டெஸ்ட் தரநிலை அணியை முற்றொழிப்பு வெற்றி பெற்றதன் பின்னணியில் கடினமான உழைப்பும், பயிற்சியும் உள்ளது.வங்கதேசத்தின் இந்த 4-0 வெற்றி கிரிக்கெட் வட்டத்தில் செல்லமாக 'பங்களா ஸ்வீப்' என்று ஏற்கனவே பெயர்பெற்றுவிட்டது.பயிற்சியாளர் ஜேமி சிடன்ஸ் கேப்டன் ஷாகிபுல் ஹஸன் ஆகியோர் இந்த வெற்றியின் பின்னணியில் உறுதியாக நின்றவர்கள் என்றால் அது மிகையாகாது.இத'ற்கு முன்பு முன்னணி வீரர்கள் இல்லாத இரண்டாம் நிலை மேற்கிந்திய அணியை மேற்கிந்திய மண்ணில் வாகை சூடிய வங்கதேசம் அதன் பிறகு மீண்டும் விட்டேற்றியான மனோநிலைக்குச் சென்றது.இதனால் இலங்கையில் படுதோல்வி தழுவியது. இந்தியாவுக்கு எதிராக எந்த வித போராட்டமும் இல்லாமல் படுதோல்விகளைச் சந்தித்தது. நியூஸீலாந்து சென்று அங்கே ஒருநாள் தொடரை 0-3 என்று இழந்தது.ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி தழுவியது. இந்தத் தோல்விதான் அவர்களை வேறு விதமாக எழுச்சிபெறச் செய்தது. வங்கதேசத்தின் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதுதான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்குபவர்கள் அதுவும் தங்களது நாடு சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது என்ற ஒரு ஆரம்ப நிலை உற்சாகத்தில் திளைப்பவர்கள் அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்.அதனால்தான் எதிரணி வீரர்கள் விக்கெட் எடுத்தாலோ, அல்லது ஒரு பவுண்டரி அடித்தாலோ அவர்களால் அதனை பாராட்ட முடியாது. ஆனால் இன்று துணைக்கண்டத்தில் இந்தியாவுக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்கள் கிரிக்கெட் பொட்டியைக் காண வருகிறார்கள் என்றால் அது வங்கதேசத்தில்தான்.இந்த நிலையில் பயிற்சியாளர் சிடன்ஸ் அவர்கள் நாட்டு ரசிகர்கள் வங்கதேச கிரிக்கெட் அணி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீரர்களின் திறனை மேம்படுத்தி உற்சாகப்படுத்த ஒரு அளவுகோலாகக் கையாண்டுள்ளார்.காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வலைப்பயிற்சி, ஃபீல்டிங் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அந்த அணியினர் கடந்த ஒன்றரை மாதங்களாக மேற்கொண்டனர்.ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா இந்த கடும் பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடுகையில், "நான் நிறைய பந்துகளை மேலே தூக்கி அடிக்கப் பழகினேன், ஏனெனில் நான் கூடுமானவரை பவர்ப்ளே தருணத்தில் இறங்குகிறேன், இந்த பயிற்சி முகாம் நீண்ட நேரம் நடைபெற்றதால் பேட்டிங்கின் அனைத்து பரிமாணங்களிலும் நான் என்னைத் தயார் செய்து கொண்டேன்." என்கிறார்.ஜூலியன் ஃபவுண்டைன் என்ற புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் அபாரமான புதிய ஃபீல்டிங் முறைகளைச் சொல்லி கொடுத்திருப்பது இந்த 4 ஒரு நாள் போட்டிகளிலும் வங்கதேச அணியின் ஃபீல்டிங்கில் எதிரொலித்தது.அப்துர் ரசாக், ஷுவோ உள்ளிட்டோர் பிடித்த அபாரமான கேட்ச்களும், பதிலி வீரர் ஒருவர் முக்கியமான கட்டத்தில் பவுண்டரியிலிருந்து நேரடியாக ஸ்டம்புகளைத் தாக்கி த்ரோ செய்த ரன்னவுட்டும் வங்கதேச கிரிக்கெட்டின் மலரும் ஒரு புதிய காலக்கட்டத்தை அறிவுறுத்துகிறது.ஷஃபியுல் இஸ்லாம் போன்ற பந்து வீச்சாளர்கள் கூட அபாரமாக டைவ் அடித்து ஃபீல்ட் செய்து பந்துகளை நேராக ஸ்டம்புகளுக்கு விட்டெறிவது பார்ப்பவர்கள் அனைவருக்கும் புதிதாகவே இருந்தது.அதே போல் பந்து வீச்சில் ரூபெல் ஹுஸைன் வீசிய யார்க்கர்கள் தீவிர பயிற்சியால் விளைந்ததே என்று அவரே கூறியுள்ளார்.அனைத்திற்கும் மேலாக ஷாகிபுல் ஹஸன் இன்று உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் - கேப்டன் என்றால் மிகையாகாது. அணி தடுமாறும் போது களமிறங்கி சதம் எடுக்கிறார். பந்து வீச்சில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். ஷாட் கவர் திசையில் நின்று கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார், வழி நடத்துகிறார்.பாகிஸ்தான் அணியும் இதுபோன்ற பயிற்சி முறையில் ஒழுக்கமாக ஈடுபட்டால், உலக அரங்கில் ஆசிய கிரிக்கெட் நாடுகள் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இன்னும் கூட தங்களூகேயுரியது என்று உரிமை கொண்டாடும் கிரிக்கெட்டின் பல பிரிவுகளிலும் இந்த நாடுகள் அந்த நாடுகளைப் பின்னுக்குத் தள்ள முடியும்.உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான வங்கதேசம் உலக கிரிக்கெட் நாடுகளுக்கு நியூஸீலாந்தை 4-0 என்று வீழ்த்தியதன் மூலம் உறுதியான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேசத்தில் விளையாடும் அணிகள் இரண்டு விஷயங்களை இனி எதிர்கொள்ளவேண்டியிருக்கும். 50,000 ரசிகர்களின் வங்கதேச கிரிக்கெட் அணிக்கான ஆதரவுக்கூச்சல் மற்றும் வங்கதேச அணியின் போராடும் குணம் இந்த இரண்டையும் எவ்வளவு பெரிய அணிகளும் இனி எதிர்கொள்ளவேண்டி வரும்.கடின உழைப்பின் பலன் கொடுக்கும் உற்சாகத்தினையும் வெற்றியையும் ருசித்த இந்த வங்கதேச கிரிக்கெட் அணி இனிமேலும் சொத்தை அணியாகச் செயல்படாது என்பதை நாம் கூற முடியும்.1994
ஆம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் ஜெயசூரியா, கலுவிதரனா, அரவிந்த டி-சில்வா சகிதம் பெரிய அணியாக உருவாகி 1996ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையைக் கைப்பற்றும் ராட்சத அணியாக உருவெடுத்த இலங்கை அணி போன்று இன்று ஷாகிப் தலைமை வங்கதேச அணி அந்தக் கட்டத்திற்கான முன்னெடுப்பைச் செய்துள்ளது.எனவே உலக கிரிக்கெட் அணிகளே "வங்கதேசம் ஜாக்கிரதை" !