ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் தலைவரான லலித் மோடியின் செயல்பாடுகள் மீது மத்திய அரசின் பிடி மேலும் இறுகுகிறது. கடைசியாக கிடைத்த செய்திகளின் படி, மத்திய அரசின் நிறுவன விவகார அமைச்சகம், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களின் விவரங்கள் அனைத்தையும் திரட்டுமாறு நிறுவனப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.ஒரு வாரத்தில் அமைச்சகத்திற்கு இந்த விவரங்கள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடக்கத்திலிருந்தே ஐ.பி.எல். கிரிக்கெட் உரிமையாளர்கள் விவரம், அதன் முதலீட்டு விவரம், லாபப் பகிர்வு ஆகிய அனைத்தையும் மூடு மந்திரமாகவே ஐ.பி.எல். நிர்வாகம் வைத்திருந்தது.ஐ.பி.எல். கிரிக்கெட் லீகில் மேலும் இரண்டு அணிகளுக்கு ஒப்பந்தம் அளித்த பிறகே தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் நடத்தப்படும் விதங்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.சகாரா அணி ரூ.1,700 கோடிக்கு புனே அணியை வாங்க, கொச்சி அணியை பதவி விலகிய அயலுறவு இணை அமைச்சர் சசி தரூரின் தலைமையில் ஒன்று திரண்ட ரெண்டஸ்வூஸ் நிறுவனம் சுமார் 1,300 கோடிக்கு வாங்கியது.இந்த ஏலத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் அனுப்பிய குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமமும், வீடியோகான் குழுமமும் புதிய அணியை வாங்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பின.இந்த நிலையில் லலித் மோடி திடீரென, அதாவது ஏலம் முடிந்த பிறகு உடனடியாக கொச்சி அணியின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை என்று கூறுவதற்கு பதிலாக, ஏனோ சில நாட்கள் கழித்து அதன் உரிமையாளர்கள் பெயர்களை வெளியிட்டதோடு, சசி தரூரின் நண்பர் என்று கருதப்படும் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணிற்கு ரூ.70 கோடி மதிப்புள்ள பங்குகளை இலவசமாக அளித்த விவரங்களையும் வெளியிட்டார்.இது பெரிய புயலைக் கிளப்ப, கடைசியில் விவகாரம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரை சென்று சசி தரூரின் பதவியை பறித்தது.ஆனால் இதில் ஏதோ தான் வெற்றியடைந்ததாக லலித் மோடி நினைத்துக் கொண்டிருக்க, அடுத்தடுத்து வருமான வரி சோதனைகள் ஐ.பி.எல். அலுவலகத்தில் நடத்தப்பட்டு, அவரது மடிக்கணினியில் உள்ள வன்பொருளை வருமானவரித் துறையினர் கைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.இதில் கடைசியாக இப்போது நடைபெற்ற புதிய அணிக்கான ஏலத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பிய வீடியோகான் மற்றும் அதானி குழுமம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த ஆவணங்கள் இருந்திருந்தால் ஐ.பி.எல். ஏலங்கள் நியாயமாக நடந்திருப்பதற்கான நிரூபணங்களை திரட்டியிருக்கலாம் என்று கருதும் வருமானவரித் துறையினர், இந்த ஆவணங்கள் மாயமடைந்திருப்பதால், இதிலும் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிந்தித்து வருகின்றனர்.
இந்தக் கோப்புகளை வைத்துத்தான் ஐ.பி.எல். தனது பக்கம் நியாயமிருப்பதாக வாதிட முடியும் என்று கருதும் வருமானவரித் துறையினர் இப்போது இது மாயமானது குறித்து இது ஐ.பி.எல். தரப்பில் ஏற்பட்டுள்ள ஓட்டை என்று கருதுகின்றனர்.
இந்த நிலையில் லலித் மோடி மீது சூதாட்ட புகார்கள் உட்பட அவரது ஐ.பி.எல். மோசடி வரை பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் சிக்கியுள்ள லலித் மோடி இந்த ஐ.பி.எல். தொடர் முடிவில் ராஜினாமா செய்து விடலாம் என்றும் ஐ.பி.எல். செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சசி தரூர் விவகாரத்தை அம்பலப்படுத்தியது, ஏதோ ஒரு விதத்தில் மோடியின் சுய அம்பலப்படுத்தலில் போய் முடிந்துள்ளது!
தற்போது அரசு எந்திரங்களின் முழு கவனமும் ஐ.பி.எல். நிர்வாகத்தை குடைவதாகத் துவங்கியுள்ளது. அதன் புதிய திருப்பமே தற்போது மத்திய நிறுவன விவகார அமைச்சகம், நிறுவனப் பதிவுத்துறைக்கு ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் விவரங்களைத் திரட்ட உத்தரவிட்டுள்ளது. என்று தெரிகிறது.
முன்பு மாருதி சுசுகி நிறுவனம் ஒரு பகுதி சுசுகியுடையவதாகவும் மறு பகுதி அரசு பங்குகள் உடையதாகவும் இருந்தது. சுசுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி. பார்கவா அப்போது அரசியல் தொடர்புள்ள எந்த ஒருவருக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் எதனையும் அளிக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்களை எழுப்பி கடைசியில் பார்கவா மீது மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் அப்போது ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சுசுகி நிறுவனம் பார்கவாவிற்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளித்தது. அதாவது இந்திய அரசுடன் உறவுகளை முறித்துக் கொண்டாலும் பிரச்சனையில்லை என்ற அளவிற்கு சுசுகி நிர்வாக இயக்குனர்கள் பார்கவாவிற்கு முழு ஆதரவு அளித்ததால் அவர் இந்த விவகாரத்திலிருந்து சுமுகமாக வெளிவந்தார். இந்த விவரங்களை பார்கவா அப்போது ஒரு நேர் காணலில் தெரிவித்திருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. ஏனெனில் இது வேண்டுமென்றே அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள். பார்கவா போன்றவர்களுக்கே இங்கு இது நடைபெற்றுள்ளது என்றால், லலித் மோடி மீது நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அரசின் நடவடிக்கைகளில் அவரை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்று கூறமுடியவில்லை.
இந்திய அரசும், அதனை நடத்துபவர்களும் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் பணம் புழங்கும் எந்த ஒரு மூலை முடுக்கையும் விட்டு வைப்பவர்கள் அல்ல என்பது, குறைந்தது இந்த உலகமயமாதல் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிய 1992ஆம் ஆண்டு முதலே நமக்கு பரிச்சயமான ஒன்றுதான்.
மீண்டும் இந்த ஐ.பி.எல். விவகாரத்தில் உண்மை வெளி வரவேண்டுமென்றால் மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு இது செல்லக்கூடாது. மாறாக எந்த ஒரு அதிகார வர்க்கத்தினரின் உத்தரவிற்கும் காத்திருக்காமல் செயல்படும் ஒரு தனித்த அமைப்பின் விசாரணைக்கு விட்டுவிடுவதுதான் சிறந்தது.
இல்லையெனில் ஏதோ லலித் மோடி மட்டுமே இதில் ஊழல் நிரம்பியவராகக் காண்பிக்கப்பட்டு அவரை மட்டும் வெளியேற்றிவிட்டு அந்த அதிகாரத்தை தற்போதைய அரசியல்வாதிகள்-கார்ப்பரேட் நெட்வொர்க் கைப்பற்றுவதாகவே இது போய் முடியும்.
ஏற்கனவே கார்ப்பரேட் நெட்வொர்க் ஐ.பி.எல். கிரிக்கெட்டைக் கைப்பற்றியதால்தான் அதன் மீது அரசிற்கு இத்தனை "அக்கறை" ஏற்பாட்டுள்ளதோ என்னவோ?