தனது அணி வீரர்கள் ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலுமே சூதாட்டம் விளையாடுகின்றனர் என்று அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை வெளியிட்ட பாகிஸ்தான் வீரர் யாசர் ஹமீது தான் அவ்வாறு கூறுமாறு வலியுறுத்தப்பட்டேன் என்றும் பிறகு அந்த நிலைப்பாட்டைத் தக்கவைக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டேன் என்றும் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.
பிரிட்டன் செய்தி ஊடகன் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நேற்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தன் அணி வீரர்களில் பலருக்கு சூதாட்டத் தரகர்களிடம் தொடர்பிருக்கிறது என்றும், அனைத்துப் போட்டிகளிலும் சூதாடுகின்றனர் என்றும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
நிருபர் என்று வந்தவர் வெறும் நட்பு முறையில் கூறுமாறும், ஸ்பான்சர்ஷிப் முகவர் போலவும் பேசி நடித்தார். பிறகு இவர்தான் தான் கூறிய விஷயங்களைத் தக்கவைக்கவேண்டும் என்று மிரட்டல் எஸ்.எம்.எஸ்.-ம் அனுப்பினார் என்று மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஹமீத் பற்றி காண்பிக்கப்பட்ட வீடியோ அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது என்றும் இது போன்று கூற அவருக்குப் பணம் தரவும் முன்வந்ததாகவும் அவரது சார்பாக பேசிய பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்தார்.
இது குறித்து யாசர் ஹமீத் கூறுகையில் நாட்டிங்கமில் உள்ள விடுதி ஒன்றில் தனக்கு இரவு உணவு விருந்து ஒரு நண்பர் அளிப்பதாகக் கூறியதையடுத்து நான் அங்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்றேன்.
அங்கு என்னை ஒரு மனிதர் அணுகி அவர் பெயர் அபித் கான் என்று அறிமுகம் செய்து கொண்டார். எடிஹாத் ஏர்வேஸ் என்ற நிறுவனத்துடன் எனக்கு விளம்பர ஒப்பந்தம் செய்ய எனது விருப்பத்தைக் கேட்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
நான் இவரை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தேன் அப்போதுதான் புரிந்தது அவர் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஊடகத்தின் நிருபர் மஷார் மசூத் என்று தெரியவந்தது.
ஆனால் உண்மையில் அவர் கூறிய விஷயம் எனக்கு சுவாரஸியமாக இருந்ததால் அவருடன் உரையாடலைத் தொடர்ந்தேன், அவர் எனக்கு 50,000 பவுண்டுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தித் தருவதாக தெரிவித்தார். யு.ஏ.இ.யில் இந்த விளம்பரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதே போன்ற ஒரு விளம்பர ஒப்பந்தத்திற்கு மேலும் 4 வீரர்களை பரிந்துரை செய்யுமாறு என்னிடம் கேட்டார். நானும் உமர் குல், அஃப்ரீடி, உமர் அக்மல், ஃபவாத் ஆலம் பெயர்களை பரிந்துரை செய்தேன்.
இந்த உரையாடலின்போதே உமர் குல்லை அழைத்து இந்த விளம்பர ஒப்பந்தம் பற்றி கூறினேன் அவரும் ஒப்புக் கொண்டார்.
இதன் பிறகு நான் அவரை ஒரு நண்பராகவே பாவித்தேன், அவர் தற்போதைய ஸ்பாட் ஃபிக்ஸிங், சூதாட்டம் பற்றி கேட்கத் தொடங்கினார். நானும் அப்பாவித் தனமாக அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தேன். இப்போது புகார் எழுந்துள்ள 3 வீரர்கள் பற்றியும் எனக்கு ஏதோ கூடுதல் விவரம் தெரியும் என்பது போல் கேட்டார், ஆனால் இது பற்றி பத்திரிக்கைகளில் படித்த செய்திகளையே அவரிடம் கூறினேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் எனக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உரைச் செய்தி வந்தது. அபித் கேமராவை மறைத்து வைத்திருதிருக்கலாம் எனக்கு அது தெரியவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அபித் என்னை போனில் அழைத்து 25,000 பவுண்டு தருவதாகவும் அந்த 3 வீரர்களுக்கு எதிராகவும் அறிக்கை கொடுக்க வேண்டும் என்றார். நான் உடனடியாக இணைப்பைத் துண்டித்து விட்டேன்.
அதன் பிறகே எனக்கு எஸ்.எம்.ஏஸ் வந்தது. அதில் : "வீடியோவில் நீங்கள் ஒயின் அருந்தியபடியே இருக்கிறீர்கள், நீங்கள் கூறியது அனைத்தும் பதிவாகியுள்ளது. அதனை இப்போது மறுப்பது முட்டாள்தனமாகும் இதனால் நீங்கள் கூறியவற்றின் நிலைப்பாட்டிலேயே நீங்கள் இருப்பதும் உண்மையை பேசுவதும் நல்லது." என்று இருந்தது.
இதுதான் யாசர் ஹமீத் கூறியுள்ளது.
பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் ரிஸ்வியுடன் யாசர் ஹமீத் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரைச் சந்தித்த பிறகுதான் அவர் இவ்வாறு அந்தர் பல்ட்டி அடித்துள்ளார்.
நமது சந்தேகம் என்னவெனில் பேட்டி எடுத்தவர் மாறு வேடத்தில் உள்ளார் நண்பர் போல் வந்தார், அல்லது வரவில்லை என்பதல்ல இப்போது பிரச்சனை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி யாசர் கூறிய சூதாட்டக் குற்றச்சாட்டுகளின் நிலவரம் என்ன?
இவர் உண்மையில் அதுபோண்ற ஒரு பேட்டியைக் கொடுத்த பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை கடிந்து கொண்ட பிறகு இவ்வாறு கூறுகிறாரா? அல்லது இவர் பணத்தாசைக்குட்பட்டு இந்த விவரங்களை வெளியிட்டாரா? அல்லது உண்மையில் அந்த ஊடகம் இவரை தந்திரமாக இதையெல்லாம் கூறவைத்து அதன் பிறகு இவரை மிரட்டுகிறதா?
ஆகஸ்ட் 30ஆம் தேதி இவ்வளவு விவகாரம் நடந்திருக்கும் போது ஏன் உடனடியாக இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகளுக்கோ அல்லது பிற ஊடகங்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை?
தலைகிறுகிறுக்கச் செய்யும் திருப்பங்களும், திருகல்களும் இந்த விவகாரம் உண்மை நிலவரத்தை விட்டு வெகுதூரம் சென்று கொண் டேயிருப்பதைத்தான் காட்டுகிறது.