மெக்கல்லம் செய்த தவறால் பிளின்டாஃபிற்கு வந்த வினை
, வியாழன், 17 செப்டம்பர் 2009 (11:04 IST)
நியூஸீலாந்து அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் தனது நாட்டு கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தார், அதே போல் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தை பிளிண்டாஃப் நிராகரித்துள்ளார். காரணம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முழு நேரமாக விளையாடும் நோக்கமே. ஆனால் மெக்கல்லம் செய்த இந்த தவறால் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி புதிய விதி ஒன்றை கொண்டு வந்து கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிளின்டாஃப் கடந்த முறை 4 போட்டிகளுக்கு மேல் விளையாட முடியாமல் போனது. ஏனெனில் அவர் காயமடைந்தார் என்பது ஒன்று, அல்லது அவர் இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும்.இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து வரும் வருவாய் குறையும். இதனை யோசித்த பிளின்டாஃப் சாமர்த்தியமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அதே சமயத்தில் தற்போது இங்கிலாந்தின் மைய ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்ததன் மூலம் அவர் முழு நேர ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராகலாம் அல்லது ஐ.பி.எல். போலவே எந்த ஒரு கிளப்பிற்கும் உலகம் முழுதும் விளையாடி பணம் செய்யலாம் என்று குயுக்தி திட்டம் தீட்டினார்.மெக்கல்லம் என்ன யோசித்தார் எனில், கடந்த முறை அதிக பணம் வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட்டு பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டிற்காக செல்ல நேர்ந்தததோடு, நியூஸீலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதால் நியூஸீலாந்து அணிக்கு விளையாட முடியாது என்று அவரால் நிராகரிக்க இயலவில்லை. இதனால் பாதியில் சென்றதால் சுமார் 282,000 டாலர்கள் தொகை மெக்கல்லமிற்கு நஷ்டம் ஏற்பட்டது.இது போன்று நிகழாமல் இருக்க மெக்கல்லம் குயுக்தியாக யோசித்தார். நியூஸீலாந்து மைய ஒப்பந்தம் இருந்தால்தானே பிரச்சனை. அதனை நிராகரித்து விடுவோம் என்று முடிவு எடுத்து நிராகரித்தார். இதனால் என்ன என்று கேட்கிறீர்களா? ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும் போது நியூஸீலாந்து அணிக்காக, விளையாட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய முடியாது அல்லவா? அதுதான் மெக்கல்லமின் திட்டம்.ஆனால் இவர்கள் ஒன்று நினைக்க, லலித் மோடி வேறு ஒன்றை முடிவு செய்து 'ஆப்பு' வைத்தார். பழைய விதிகளின் படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே ஆட்சேபணை இல்லை சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். தற்போது 'ஒப்பந்தத்தில் இல்லை இருந்தாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கிறோம்' என்று வீரர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்று மோடி வைத்தார் ஒரு ஆப்பு.
தற்போது தேசிய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும், எந்த ஒரு வீரரும், அனுமதிப் பத்திரம் சமர்ப்பித்தால் மட்டுமே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அனுமதிக்கப்படுவர். இதுதான் லலித் மோடி கொண்டு வந்த புதிய விதி.மெக்கல்லம் விதிமுறைகளில் ஓட்டையை தவறாக பயன்படுத்தப் போய், அது கடைசியில் பிளின்டாஃபிற்கு ஆப்பு வைத்த செயலாகிப் போனது.ஐ.பி.எல். கிரிக்கெட்டால், அதன் பண மழையால் வீரர்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாடாமல் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி சொந்த வருவாயைப் பார்த்துக் கொள்கின்றனர். தேசிய கிரிக்கெட் அழிந்து விடும் என்றும், ஐ.பி.எல். கிரிக்கெட்டால் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் அழிந்து விடும் என்றும் ஐ.பி.எல். மீது அனைவரும் சாபமிட்டனர். ஆனால் தற்போது மோடி அது போன்று நிகழாமல் இருக்க உத்தரவாதம் அளித்துள்ளார்.நாட்டிற்கு ஆடாமல் ஃபிரீலான்ஸாக தங்கள் சொந்த வருவாய்க்காக கிளப் மட்ட கிரிக்கெட்டை மட்டுமே விளையாடி பிழைத்துக் கொள்ளலாம் என்று வீரர்கள் முடிவெடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது ஐ.பி.எல். குழு.உதாரணமாக, இங்கிலாந்து அணி பிப்ரவரி-மார்ச் மாதங்களில் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடருக்கு அனைத்து ஒப்பந்த வீரரகளும் உள்ளனர் என்று இங்கிலாந்து பேட்டிங் ஆலோசகர் ஆன்டி பிளவர் கூறியுள்ளார். இந்த தொடரில் ஒப்பந்த வீரராக பிளின்டாஃப் இருந்தால் விளையாடியாகவேண்டும். அப்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு பாதி போட்டிகள் முடிந்தவுடந்தான் பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வருவார். இதனால் ஐ.பி.எல். வருவாயில் பாதி குறைந்து விடும்.
இதனைத் தவிர்க்கவே பிளின்டாஃப் தேசிய ஒப்பந்தமா 'எனக்கு வேண்டாம்' என்று நிராகரித்துள்ளார். ஆனால் இப்போது பிடி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கையில் உள்ளது. வரும் ஐ.பி.எல். சீசனில் பிளின்டாஃப் விளையாடுவதற்கு இங்கிலாந்து ஏற்கனவே ஆட்சேபணையில்லை சான்றிதழை வழங்கியுள்ளது. ஆனால் 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் பிளின்டாஃப் மீண்டும் என்.ஓ.சி. பெற்றால்தான் முடியும். அப்போது இங்கிலாந்து வாரியம் மறுத்து விடவும் வாய்ப்பு உள்ளது.6
வாரங்கள் விளையாடினால் போதும் நிறைய பணம். இதுதான் வீரர்களின் கணக்கு. இது ஐ.பி.எல் துவங்கும் போது அனைவருக்கும் ஏற்பட்ட அச்சம். ஆனால் மோடி தற்போது கூறுகிறார் " நாட்டிற்காக விளையாடாமல் ஃப்ரீலான்சாக விளையாடுவதை ஊக்குவிக்கப் போவதில்லை" என்று.இதனால்தான் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கையை அணிக்கு 10 வீரர்களாக அதிகரித்தோம், ஏனெனில் 4 வீரர்கள் மட்டுமே ஒரு போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால், தேசிய அணிக்கு வீரர்கள் சிலர் விளையாடச் சென்றாலும் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிகப்படும் என்று முடிவெடுத்தோம் என்கிறார் மோடி.தற்போது பிளின்டாஃப் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய ஒப்பந்தத்தை நிராகரித்ததன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை என்.ஓ.சி.க்காக அண்டியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நல்லெண்ணத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பிளின்டாஃப், மெக்கல்லம் மட்டுமல்ல, நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடாமல் தன் சொந்த வருவாய்க்காக ஒரே ஒரு கிரிக்கெட்டை மட்டும் ஆடும் மனப்போக்கு கொண்ட வீரர்களுக்கு லலித் மோடியின் இந்த புதிய அதிரடி விதிமுறை அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கும்.
ஆனால் மேலும், மேலும் நல்ல வீரர்களை இழந்து விடுவோமோ என்ற கிரிக்கெட் வாரியங்களின் அச்சத்தை மோடி தற்போது போக்கியுள்ளர் என்பது உண்மைதான்.மோடியும் இதனை நல்லெண்ண அடிப்படையில் செய்திருப்பார் என்று கூற முடியவில்லை. ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக தேசிய கிரிக்கெட்டை உதறும் வீரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தால், ஐ.சி.சி.யின் மற்ற உறுப்பு நாடுகள் ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கே 'ஆப்பு' வைத்து விடும் என்ற பயம்தான் மோடியின் இந்த புதிய கிடுக்கிப்பிடிக்கு காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.