Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முரளிதரன் பற்றி பிஷன் சிங் பேடி கூறுவது நியாயமா?

Advertiesment
முரளிதரன் பற்றி பிஷன் சிங் பேடி கூறுவது நியாயமா?

Webdunia

, சனி, 18 ஆகஸ்ட் 2007 (17:29 IST)
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சைப் பற்றி நம் பிஷன் சிங் பேடி அடிக்கடி தாறுமாறாகவும் கேலியாகவும் ஏதாவது கூறுவது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது போன்று தொடர்ந்து முரளிதரனை ஒரு கேலிக்குரிய வகையிலும் நியாயமற்ற முறையிலும் பிஷன் சிங் பேடி பேசி வருவதால், முரளிதரனின் வழக்கறிஞர்களபேடியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர்!

முரளிதரனின் பந்து வீச்சை ஈட்டி எறிவது போல் இருக்கிறது என்றார் பேடி. பிறகு, ஷாட்புட் எறிவது போல் உள்ளது என்றார். அனைத்திற்கும் மேலாக அவர் 1000 விக்கெட்டுகள் எடுத்தாலும் அனைத்தும் ரன் அவுட்களே என்றார்.

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு குறித்து எழுந்த புகார்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் திருத்தங்களும் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளதக்கபடியே உள்ளது என்று ஐ.சி.சி. அதிகாரப் பூர்வமாக அறிவித்த பின்னரும் தொடர்ந்து பிஷன் சிங் பேடி அவரை இப்படி கேலியாக எழுதி வருகிறார்.

இது போன்ற ஒரு கேலியான பேச்சை ஏன் ஷோயப் அக்தார் மீதோ ஆஸ்திரேலியாவின் பிரட் லீ மீதோ பிஷன் சிங் பேடி பேசுவதில்லை. இவர்களும் பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டு ஐசிசியின் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களே. நமது ஹர்பஜன் சிங் கூட குற்றம்சாட்டப்பட்டு பிறகு திருத்தப்பட்டு பந்து வீசி வருகிறார்.

இவ்வாறு இருந்தும் முரளிதரனை மட்டும் பிஷன் சிங் பேடி குறி வைத்து கேலிக்கிண்டல் செய்து வருவது, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஊடகங்கள் முரளிதரனை கேலிக்குறிய ஒரு பந்து வீச்சாளராக பார்க்கும் ஒரு வெள்ளை மாயை பிஷன் சிங் பேடியையும் தொற்றியுள்ளதோ என்று நாம் சந்தேகிக்க வேண்டியதாக உள்ளது.

ஒரு பந்து வீச்சாளர் சரியாக வீசுகிறாரா? அல்லது எறிகிறாரா? என்பதையே ஐ.சி.சி.யின் தொழில்நுட்பக் குழு வெகு காலம் வரை சரியாக வரையறை செய்யவேயில்லை. அவ்வாறு செய்த போதும் முழங்கை பந்தை வீசும்போது எத்தனை டிகிரி மடங்குகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் எறிவதையே நிர்ணயம் செய்தது. அந்த அடிப்படையிலும் முரளிதரனின் பந்து வீச்சு ஏற்றுக் கொள்ளத் தக்கது என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.

சராசரியாக கிரிக்கெட்டை அறிந்த எவருக்கும் பந்தை எறிவது என்றால் என்னவென்று தெரியும். சுழற்பந்து வீச்சாளர் பந்தை எறிந்தால் ஆடுபவருக்குத்தான் சுலபம். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை வீசும்போது, அவர்கள் எறிந்ததாக ஒப்புக் கொள்ளப்படுமாயின், பந்து மேலெழும்பி கீழாக வந்து பிட்ச் ஆகாது. மாறாக, வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும்போது வருவதைப் போல ஒரு நேர் கோட்டில் கையில் இருந்து விடுபட்டு பிட்ச் ஆகி மேலெழும்பும். இதில் இருந்தே பந்து எறியப்பட்டதா? வீசப்பட்டதா? என்பதை முடிவு செய்து விடலாம்.

முரளிக்கு இயற்கையிலேயே அமைந்த ஒரு குறைபாடு அவரது முயற்சியால் திறமையானதாக மாற்றப்படுகிறது. புறங்கையை முன்புறமாக தெரியும்படி பந்தை சுழற்றி வீசும் முறையில் முதலில் த்ரோ செய்முடியுமா என்பது ஒரு அடிப்படை கேள்வி. நாம் த்ரோ செய்யும்போது நன்றாக முழுககை பலத்தையும் பயன்படுத்தி கையை மடக்கி எறிவதுதான் வழக்கம். முரளிதரனின் பந்து வீசு முறைமையில் த்ரோ செய்வது என்பது இயலாத காரியம். அவ்வளவு கஷ்டப்பட்டு அவர் த்ரோ செய்வேண்டிய தேவையில்லை. அவருக்கு இயற்கையிலேயே அமைந்த குறைபாடு பந்து வீச்சிற்கு வரப்பிரசாதமாக உள்ளது.

வர்ணனையாளர்கள் கருத்து, நிபுணர்களின் பரிசோதனைகள் இவை எல்லாமும் முரளிதரனை மட்டுமே இலக்காக கொள்வது வேதனையான விஷயம். முரளிதரனின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறும் ஆஸ்ட்ரேலியாவும், இங்கிலாந்தும்தான் அவர் மீது அதிகமான கண்டனக் கணைகளை செலுத்தியுள்ளன. அவர்களுடைய ஆட்டத்திறனுக்கு முரளிதரன் மிகப்பெரிய சவால் என்பது கிரிக்கெட் ஆட்டங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் புரிந்ததுதான்.

முரளிதரன் வீசும் பந்துகள் அளவுக்கு அதிகமாக திரும்புகிறது, தூஸ்ரா என்ற அவரது எதிர்மறை சுழல் பந்து பேட்ஸ்மன்களுக்கு அளவுக்கதிகமான பிரச்சனைகளை அளிக்கிறது என்றால் அது பேட்ஸ்மன்களின் உத்தி ரீதியான பிரச்சனையே தவிர அதற்கு முரளிதரனை குறை கூற முடியாது.

அடிப்படையாக பார்த்தால் ஓடி வந்து கையைத் தூக்கி பிறகு த்ரோ வீசுவது என்பது இயலாத காரியம். இந்த பிரச்சனையை ஆஸ்திரேலிய ஊடகங்களின் ாக்கத்தினால் நடுவர் டேரல் ஹேர் ஊதிப்பெரிதாக்கினார். உண்மையில் பார்த்தால் ஒருவர் ஒன்று, த்ரோ மட்டுமே செய்யமுடியும் அல்லது கையை சுழற்றி பந்து வீச முடியும். முறையாக பந்து வீசுவது போல் த்ரோ செய்வது இயற்கையாக இயலாதது. அதனை அவ்வளவு சுலபமாக செய்யமுடியாது என்றே ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள பயோமெகானிக்கல் டாக்டர் கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் முழங்கையை மடக்கலை ஐசிசி 15 டிகிரி என்ற வரையரையை நிர்ணயித்துள்ளது.

இன்னும் தீவிரமாக கேள்வி எழுப்பினால், பந்து வீச்சின் அனைத்து வகைகளையும் உத்திகளையும் முடக்கியதன் மூலமே இன்றைய பேட்டிங் சூப்பர் ஸ்டார்கள் உருவாகி வருகிறார்கள் என்று கூறமுடியும்.

பாடி-லைன் என்று ஒரு தாக்குதல் முறை வேகப்பந்து வீச்சை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடைபிடித்த இங்கிலாந்து, பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் தோன்றிய பிரம்மாண்டமான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திராணியற்று ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்களுக்கு மேல் போடக்கூடாது போன்ற பலவீனத்தை வெளிப்படுத்தும் விதிமுறைகளுக்கு கண்மூடித்தனமக ஆதரவு அளித்து இன்று அது ஒரு விதியாக நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஒரு சாதரண சுழற்பந்து வீச்சையே ஒரு போதும் சரியாக எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸீலாந்து அணிகள் முரளிதரனின் புரியாத புதிரை எவ்வாறு எதிர்கொள்ளமுடியும், அதனை த்ரோ என்று கூறி முடக்குவதைத் தவிர?

இந்த பொறியில் பிஷன் சிங் பேடி ஏன் சிக்க வேண்டும்? ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் புதிய முறை வீச்சுகளை கெளரவித்து ஆதரவளிக்க வேண்டிய ஒருவர் அதனை திறம்பட பயன்படுத்தி கிரிக்கெட் ஆட்டத்தை உற்சாகம் குறையாமல் வைத்திருக்கும் முரளிதரன் பந்து வீச்சை கடுமையாக கேலி பேசுவது எந்த விதத்திலும் கிரிக்கெட்டிற்கு நியாயம் செய்வதாகாது.

மேலும் கிரிக்கெட் உணர்வு பற்றி பேடி பேசுவது விந்தையிலும் விந்தை. பாகிஸ்தானில் அவர் தலைமையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி சென்றிருந்த போது டெஸ்ட் போட்டி ஒன்றை பாதியிலேயே நிறுத்தி வெளியேறியவர்தான் இவர். அந்த ோட்டியை பாகிஸ்தான் வென்றது. இது எந்த கிரிக்கெட் உணர்வில் சேர்ந்தது.

இன்று நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி, காமிரா உள்ளிட்ட தொழில் நுட்பத்தின் உதவியுடன் கிரிக்கெட்டை பார்க்கும் காலத்தில் கிரிக்கெட் உணர்வு பற்றி முன்னாள் வீரர்கள் பலர் வாய் கிழிய பேசுவது வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

ஷேன் வார்ன், முரளிதரன், அனில் கும்ப்ளே இவர்களது சாதனைகளின் பின்னணியில் ஒரு காலத்தில் பேடியின் பெயர் உருத்தெரியாமல் போகப்போகிறது. இதனை நன்கு உணர்ந்திருப்பதானல் ஏற்படும் பொறாமையே பேடியை இது போன்று கருத்துக்களை கூறி மலிவான விளம்ப்ரங்களை தேடச் செய்கிறது என்றே தோன்றுகிறது.

பேடி ஒன்றை உணர வேண்டும். அவருடைய பந்து வீச்சை நேரில் கண்டவர்கள் இன்றைக்கும் பலர் உயிரோடு இருக்கின்றார்கள் என்பதை...

Share this Story:

Follow Webdunia tamil