கண்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 709 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷேன் வார்னின் உலக சாதனையை முறியடித்தார்.
இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் விக்கெட்டை க்ளீன் பவுல்டு செய்து முரளிதரன் 709வது விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனையை எட்டினார்.
நடந்து முடிந்த ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்தில் வார்னின் உலக சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் முரளிதரனை சிறப்பாக விளையாடினர். இதனால் அங்கு அவர் 2 டெஸ்ட்களில் 4 விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது.
இந்நிலையில் மேலும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் வார்னின் உலக சாதனையை முறியடிக்கலாம் என்ற இலக்குடன் தற்போது கண்டி டெஸ்டில் பந்து வீசி வந்த
முரளிதரன் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் இதுவரை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
தனது 116வது டெஸ்டில் முரளிதரன் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 188 ரன்களை எதிர்த்து இங்கிலாந்து சற்று முன் வரை 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது.