ஒவ்வொரு தொடருக்கு முன்பும் இந்திய ஒரு நாள் அணியைத் தேர்வு செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கூறப்படுவது சாலஞ்சர் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர். ஆனால் அதில் எந்த விதமான சாலஞ்சும் இல்லாத ஒரு போட்டிகளாகவே நடத்தப்படுவதை நாம் காண்கிறோம்.
ஏன் இந்த சந்தேகம் எழுகின்றது என்றால், ஆஸ்ட்ரேலியாவிற்கு செல்லும் இந்திய ஒரு நாள் அணியை தேர்வு செய்யப்போகும் சாலஞ்சர் கோப்பை போட்டிகளில் கிரிக்கெட் மும்மூர்த்திகளான சச்சின், திராவிட், கங்குலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனியர்ஸ், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் இந்த ஆட்டங்களில் மோதும். இதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியமல்ல. எந்த வீரர் திறமையாக வீசினார், எந்த வீரர் அதிக திறமையுடன் பேட்டிங் செய்தார் என்பதெல்லாம் தான் இதில் முக்கியம்.
மூத்த வீரர்கள் ஒரு சிலர் அதற்கு முன்பு காயம் அடைந்திருந்தார்களேயானால், அடுத்த சர்வதேச தொடருக்கு தான் தயாராகிவிட்டதாக ஊடகங்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் காண்பித்துக் கொள்ள இந்த சாலஞ்சர் கோப்பை போட்டிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்தன.
ஆனால் தற்போதுதான் சச்சின், கங்குலி, திராவிட் "நல்ல உடற் தகுதி"யுடன் இருக்கிறார்களே... அதனால் அவர்கள் இதில் ஆடவேண்டிய நிர்பந்தம் இல்லை. எனவே "ஓய்வு" அளிக்க வேண்டியதுதான் என்று கிரிக்கெட் வாரியம் நினைக்கலாம். ஆனால் இது ஓய்வு அளிப்பதுதானா அல்லது அணியில் அவர்களின் இடத்தை மேலும் உறுதி செய்து பாதுகாக்கும் நடவடிக்கையா? என்ற சந்தேகம் எழுகிறது.
தற்போது எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு கழகத்திலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களை அனுபவமிக்க இந்த மூத்த வீரர்கள் எதிர் கொள்வது கடமையாகாதா? அது அந்த வேகப்பந்து வீச்சாளர்களை உற்சாகப்படுத்தாதா? சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர்கள் தயாராகும் முன், சர்வதேச அளவில் 1000 ஒரு நாள் போட்டிகளை விளையாடி சுமார் 35,000 ரன்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டுள்ள இந்த மும்மூர்த்திகளுக்கு அவர்கள் வீசினால் அவர்களின் திறமையும் அதிகரிக்குமே? ஏன் இந்த நோக்கம் தேர்வுக் குழுவிற்கு இல்லை.
நாம் மற்றொரு வகையில் பார்ப்போம்: இந்த 3 வீரர்களும் அப்பழுக்கில்லாத கிரிக்கெட்டை ஆடி இந்திய அணியை தொடர் வெற்றிக்கு அழைத்து சென்றிருக்கிறார்களா? அல்லவே. ஒவ்வொரு தொடரின் போதும் முதல் 2 போட்டிகளில் மோசமாக ஆடி தோல்விக்கு இட்டுச் செல்வர். பிறகு மெதுவாக ஒரு அரை சதம் அடித்து தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்வார்கள்.
சரி சச்சின் அல்லது திராவிட் அல்லது கங்குலி அரை சதம் மூலம் ஃபார்மிற்கு வந்து விட்டார்கள், அடுத்த போட்டியில் விளாசுவார்கள் என்று வேலையை விட்டு ஓடி வந்து டி.வி முன்னால் அமரும் ரசிகர்களுக்கு இவர்கள் அளிப்பது ஏமாற்றமே. இவர்களின் தடவல் ஆட்டத்தை பார்க்கவேண்டிய துர்பாக்கியமான நிலை.இந்த மூவரும் என்ன சோதனைகளுக்கும், பரிட்சைக்கும் அப்பாற்பட்டவர்களா? சரி சர்வதேச போட்டிகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.. ஒப்புக் கொள்ளலாம், அப்போது ஏன் சர்வதேச போட்டிகளில் ஓரிரு போட்டிகளிலிருந்து அவர்களுக்கு ஓய்வு அளிக்கக் கூடாது? அதையும் தேர்வுக்குழு செய்வதில்லை. ஏன்?வேறு எந்த நாட்டிலும் இது போன்று நடப்பதில்லையே. நம் திராவிடை விட பெரிய ஆட்டக்காரராக, சீரான முறையில் ரன்களை குவித்த, நெருக்கடிகளில் உதவிய ஆஸ்ட்ரேலிய வீரர் டேமியன் மார்டின் எவ்வாறு அணியிலிருந்து அனுப்பப்பட்டார் என்பதை நாம் அறிவோம்.இளம் வீரர்களுக்கு மட்டும்தான் தேர்வுப் போட்டிகள் என்றால் அது என்ன ஜன நாயகம். சரி அப்படி தேர்வு செய்தவர்கள் எத்தனை பேர் இன்று அணியில் இருக்கிறார்கள். ஸ்ரீசாந்த் தவிர ஒருவரும் இல்லையே.கடந்த முறை இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் ரனதீப் போஸ் என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டார் என்பதாவது நமக்கு நினைவிருக்கிறதா? தொடருக்கு முந்தைய 2 கவுண்டி போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதையாவது நாம் அறிவோமா? அவர் ஏன் ஒரு நாள் அணியிலிருந்து அனுப்பப்பட்டார்? இதுபற்றியல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லையே?உள் நாட்டு போட்டிகளை ஆடி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விரேந்திர சேவாக், மொஹமது கயீப், சுரேஷ் ரெய்னா, வாசிம் ஜாபர், பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக், ஆகாஷ் சோப்ரா மற்றும் சில திறமையான பந்து வீச்சாளர்கள் இவர்களுக்கு மட்டுமே விதிடிக்கப்பட்டுள்ள தலைவிதியா?
இருபதிற்கு 20 கிரிக்கெட்டில் 30 பந்துகளில் 65 ரன்களை குவிக்கும் சேவாக், ஒரு நாள் போட்டிகளில் விளையாட சாலஞ்சர் கோப்பை போட்டியில் ஆடவேண்டியுள்ளது. ஆனால் மும்மூர்த்திகள் சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு தடவினாலும் தொடர்ந்து ஆடி வருவார்கள். அவர்கள் இளம் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ளவேண்டிய தேவையில்லை. இதுதான் ஸ்பான்சர் வழி செல்லும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தர்மம்.
எவரும் தங்களது இடத்தை உறுதியாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று திலிப் வெங்சர்க்கார் எச்சரிக்கை செய்யவேண்டிய அவசியம் என்ன? அதிகாரம் அவர் கையில் இருக்கிறது. ஓரிரு ஆட்டத்தில் இந்த மும்மூர்த்திகளில் ஒருவரை உட்கார வைக்கவேண்டியதுதானே? இது கங்குலி மற்றும் திராவிடிற்கு கூட நடந்துள்ளது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் இது வரை தொடர்ந்து மோசமாக ஆடிவரும் தருணங்களிலும் கூட நீக்கப்பட்டதாக தகவல் இல்லை.
அதாவது அவர் விளையாடுவது அல்லது விளையாடாமல் இருப்பது என்பது அவரின் விருப்பம் மட்டுமே. கங்குலி மீண்டும் அணிக்கு திரும்பியபோது அவரிடம் பேட்டி கண்டபோது. எந்த ஒரு வீரருக்கும் இது போன்று நீக்குதல் படலம் ஏற்படும், ஆனால் சச்சினுக்கு ஏற்பட்டதில்லை என்று கூறியதுடன், சற்று தயங்கியபடியே.... “சச்சினுக்கு ஏற்படவே ஏற்படாது” என்றார்.
ஆனால் கங்குலியே ஒரு தீர்க்கமான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன்தான். அவர் தற்போது சச்சினின் "ஈடுபாடு" குறித்து பேசி வருவது மெய் சிலிர்க்கவைக்கிறது.
நமக்கு தேவை ஈடுபாடா? அல்லது வெற்றியில் பங்களிப்பா? ஒருவர் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய எந்த விதமான லட்சிய மாயைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரிடம் மட்டையை கையில் கொடுத்தால் ரன்கள் எடுக்க வேண்டும். பந்தை கையில் கொடுத்தால் சிறப்பாக வீச வேண்டும் அவ்வளவே. இதற்குத்தான் பயிற்சிக்காக ஏகப்பட்ட பணத்தை ஒரு வீரர் மேல் கிரிக்கெட் வாரியம் செலவு செய்து வருகிறது.
மூத்த வீரர்களான மும்மூர்த்திகளின் ஈடுபாடு யாருக்கு தேவை. அணிக்கு தேவை வெற்றிகள். அல்லது படு மோசமான தோல்வியை தவிர்த்தல். இதற்கு இவர்கள் ஏதேனும் பங்களிப்பு செய்கிறார்களா? இல்லையெனில் அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டை ஆடி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை தவிர வேறு வழியில்லை.
ஓய்வு அறிவிக்க வேண்டிய வயதில் ஓய்வு அளிப்பதாகக் கூறுவது நியாயமா? எப்போதும் ஒரு 5 அல்லது 6 வீரர்கள் இறுதி 11ல் இருப்பார்கள். மீதி உள்ள 5 இடங்களுக்காக சாலஞ்சர் கோப்பை நடத்தி அதில் 33 வீரர்களை விளையாட வைப்பது... யாரை நம்ப வைக்க நடத்தப்படும் கண் துடைப்பு? தெளிவாக்குமா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், பரபரப்பு விரும்பி ஊடகங்களும்?