முதல் தர அணிகளுக்கு எதிராக முதல் தர பேட்ஸ்மென் லஷ்மண்!
, திங்கள், 20 ஆகஸ்ட் 2012 (17:33 IST)
இந்திய அணியில் நியாயமாகக் கிடைக்கவேண்டிய அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்காமலேயே வெங்கட் சாய் லஷ்மண் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும் இவரது முடிவை ரசிகர்களும், கிரிக்கெட் உலக பெருந்தகைகளும் மதிக்கவேண்டும் என்பதே நம் கோரிக்கை.அசாருதீனுக்குப் பிறகு அணியின் ஆகச் சிறந்த 'எலிகண்ட் பேட்ஸ்மென்' என்று முன்னணி கிரிக்கெட் நிபுணர்களாலும் இயன் சப்பல், ஜெஃப் பாய்காட், டோனி கிரேக் உள்ளிட்ட ஜாம்பவான்களாலும் மலையளவு புகழப்பெற்றவர் வி.வி.எஸ்.லஷ்மண்.
இந்தியா அயல்நாடுகளில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக அளவில் வெற்றிக்கு பங்களிப்பு செய்தவர் லஷ்மண். அடிலெய்டில் ஆஸ்ட்ரேலியாவை கும்ப்ளே தலைமை இந்திய அணி வீழ்த்த இவர் எடுத்த ஸ்கோர்களே பிரதானமாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக தொடரை சமன் செய்த வெற்றியிலும் கூட லஷ்மண் எடுத்த 96 ரன்கள் மிக முக்கியமானவை.இலங்கையில் 267 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தியதும், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இஷாந்த் ஷர்மா, ஒஜாவை வைத்துக் கொண்டு வெற்றியை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்ததும் லஷ்மண்தானே தவிர நட்சத்திர அந்தஸ்து பெற்ற பேட்டிங் "மேதை" என்று வர்ணிக்கப்படுபவர்கள் அல்ல.லஷ்மணின் பேட்டிங் உத்தி அதிரடி பாணி கிடையாது, பந்துகளை இடைவெளியில் அடித்து எதிரணி கேப்டனின் பீல்டிங் உத்தியை மாற்றியமைக்கச் செய்வதாகும், ஆனாலும் ஒரு இன்னிங்ஸில் அவர் அடிக்கும் ரன்களில் பவுண்டரிகளிலேயே அதிகம் ஸ்கோர் செய்யும் வீரர்களில் ஓரிருவரில் லஷ்மண் குறிப்பிடத்தகுந்தவர்.மருத்துவராகச் செல்ல வேண்டியவர் கிரிக்கெட்டில் கலக்கியது என்பது ஒரு இவரது சிறப்பம்சமாகும். திராவிட், டெண்டுல்கர் டெஸ்ட் சராசரி 50 ரன்களுக்கும் மேல் இவரது சராசரி பல வேளைகளில் 50 ரன்களை எட்டும் தறுவாயில் வந்துள்ளது. இப்போது கூட இவரது சராசரி 46 என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக இந்தியா 8- 0 என்று தோல்வி தழுவிய இந்த இரண்டு தொடர்கள்தான் இவர் தொடர் முழுதும் சோபிக்காமல் போன ஒரு அரிதான தருணமாகும். ஆனால் இங்கிலாந்தைத் தவிர ஆஸ்ட்ரேலியாவில் திராவிட், சச்சின் இருவருமே சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்த்க்கது. சச்சின் டெண்டுல்கரும் இரு தொடர்களிலுமே சொதப்பினார். 100வது சதத்தை மனதில் கொண்டு அவர் ரொம்பவே படுத்தி எடுத்தார்.ஆனால் லஷ்மண் ஒரு தன்னலமற்ற பேட்ஸ்மென் என்றால் அது மிகையாகாது! டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் மோசமாகவே துவங்கினார். காரணம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனான இவரை துவக்க வீரராக களமிறக்கி 'தியாகம்' செய்யவைத்தது இந்திய அணி நிர்வாகம். அந்த காலக்கட்டத்தில் இவர் 16 டெஸ்ட் போட்டிகளில் 24 ரன்களே சராசரியாகப் பெற முடிந்தது. இதனை நீக்கிவிட்டுப் பார்த்தால் 118 போட்டிகளில் இவரது சராசரி 49.42 என்பது குறிப்பிடத்தக்கது.டெண்டுல்கரும், திராவிடும் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுடன் ரன் எடுக்கும் வாய்ப்பை பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர். சச்சின் வங்கதேசம், ஜிம்பாப்வேயிற்கு எதிராக 96 ரன்களை சராசரியாகப் பெற திராவிட் 85 ரன்களை சராசரியாகப் பெற்றுள்ளார்.மேலும் இந்த இரு பலவீனமான சொத்தை அணிகளுக்கு எதிராக 1500 ரன்களை எடுத்த இரண்டு இந்திய வீரர்கள் திராவிடும், சச்சினுமே! ஆனாலும் திராவிடும் சச்சினும் முன்னணி அணிகளுக்கு எதிராகவும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளனர். அதனால் அவர்கள் இருவரையும் அசைக்க முடியாது.சிட்னியில் 167 ரன்களை அபாரமாக ஆடி எடுத்த லஷ்மண் தன் முதல் சதத்தை ஆஸ்ட்ரேலியாவில் எடுத்தார் அதிலிருந்து அவர் ஒரு புதிய பேட்ஸ்மெனாக பரிணமிக்கத் துவங்கினார்.இந்த இன்னிங்ஸிற்கு 4 டெஸ்ட்கள் க்ழித்துதான் டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆகச்சிறந்த இன்னிங்ஸ் என்று புகழப்பட்ட கொல்கட்டா 281 ரன்கள் இன்னிங்ஸ் நிகழ்ந்தது. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரை இவர் 20 அரைசதங்களில் 7-ஐ சதமாக மாற்றினார் இந்த காலக்கட்டத்தில் இவரது சராசரி 60 ரன்கள்!
ஆனால் அதற்கு அடுத்த 30 டெஸ்ட்கள் லஷ்மண் சோபிக்கவில்லை சராசரியும் கடுமையாக சரிந்தது. அதன் பிறகு 2007 - 2011 காலக்கட்டத்தில் விளையாடிய 50 டெஸ்ட் போட்டிகள் இவருக்கு பொற்காலமாக அமைந்தது இப்போது அவரது சராசரி 55 ரன்களை எட்டியது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் 7 சதங்களையே அடித்திருந்தாலும் இந்த காலத்தில்தான் இலங்கைக்கு எதிராக 103 ரன்களையும், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 74 நாட் அவுட் இன்னிங்ஸ்களையும் ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இரண்டுமே 4வது இன்னிங்ஸில் எடுத்த ரன்கள். இதே காலக்கட்டத்தில் இவரது 4வது இன்னிங்ஸ் சராசரி 76.42 என்பது குறிப்பிடத்தக்க்து. ஒட்டுமொத்த டெஸ்ட் வாழ்விலும் இவரது 4வது இன்னிங்ஸ் சராசரி 40 ரனக்ளுக்கு சற்று மேல் என்பது குறிப்பிடத்த்க்கது.1998
ஆம் ஆண்டிற்குப் பிறகு டெஸ்ட் தரநிலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 29 டெஸ்ட் போட்டிகளில் 3060 ரன்களை 9 சதங்களுடன் 61.20 என்ற சராசரியில் பெற்று முதல் வீரராக திகழ்கிறார்.இவ்ருக்கு அடுத்த படியாக லஷ்மண் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மட்டும் 29 டெஸ்ட் போட்டிகளில் 2434 ரன்களை 49.67 என்ற சராசரியில் 6 சதங்களுடன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் அடுத்ததாக திராவிட், சேவாக், லாரா, ஜாக் காலிஸ் உள்ளனர்.லஷ்மண் ஆட்டத்தின் சிறப்பம்சம் ஸ்பின் பந்து வீச்சை அவர் எதிர்கொண்டது. குறிப்பாக ஷேன் வார்னை அவர் பாடாய் படுத்தினார். ஷேன் வார்னே ஒரு முறை விக்கெட் எடுப்பதற்கு மிகவும் கடினமான வீரர் லஷ்மண் என்றார்.ராகுல் திராவிட், சச்சின், கங்கூலி, ஏன் கடைசியாக தோனியுடன் கூட இவர் சேர்ந்து ரன்களை அதிக அளவில் எடுத்துள்ளார். லஷ்மண் என்றால் அவரது கேட்சிங் நமக்கு ஞாபகம் வரவேண்டும். 2004ஆம் ஆண்டு கங்கூலி தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்று தொடரை சமன் செய்தபோது லஷ்மணின் கேட்சிங் அபாரமாக இருந்ததை அப்போது இயன் சாப்பல் குறிப்பிட்டு புக்ழ்ந்து பேசியுள்ளர். அவர் 135 கேட்ச்களை பிடித்துள்ளார் உலக சாதனையாளரான் திராவிட் 209 கேட்ச்களை பிடித்து முதலிடம் பிடிக்க இரண்டாவது இடத்தில் லஷ்மண் உள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் லஷ்மணை மறந்திருப்போம், ஆனால் அதில் அவர் எடுத்த 6 சதங்களில் 4 சதங்கள் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக என்பதையும் நாம் மறக்கலாகாது.அனைத்திற்கும் மேலாக அமைதியானவர், அடக்கமானவர், அடக்கத்திலும் ஆக்ரோஷத்தை விட்டுக் கொடுக்காதவர் லஷ்மண். ஓய்வறையில் இவரது இருப்பு மற்ற வீரர்களுக்கு ஒரு தைரியம். சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் தங்களது பேட்டிங் சோடை போகும்போது லஷ்மணையே ஆலோசனை செய்து வந்தனர்.இந்த மட்டத்தில் இந்தியா ஒரு அபார பேட்டிங் திறமைக்கு உரிய மரியாதையும் வழியனுப்பு விழா செய்யாமல் சடங்கற்ற முறையில் அவரை ஓய்வு பெற அனுமதிதிருப்பது முதிர்ச்சியான செயலாகத் தெரியவில்லை.அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் இருந்தே தீரும், கங்கூலி, கும்ப்ளே, திராவிட், லஷ்மண் ஓய்ந்தாகிவிட்டது. அடுத்த தலை சச்சின் எப்போது என்று அனைவருக்குள்ளும் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்யும்.இதற்கு பதிலாக திரு. மதன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தையே நாம் குறிப்பிடமுடியும்.மைதாந்த்தில் ஒரு கிழவர் பேடு, பேட் சகிதம் களமிறங்குவார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் கேட்பார் " என்னப்பா இவர் இன்னும் ரிட்டையர் ஆகலையா?அதற்கு மற்றொருவர் அளிக்கும் பதில் : " என்ன செய்யறது இன்னும் பார்மில் இருக்காரே"!அதுபோல்தான் சச்சின் டெண்டுல்கர் பார்மில் இருந்தால் இந்த நிலைதான் தொடரும். அவர் பார்ம் இல்லாது போகும்போது இந்தக் கேலிச்சித்திரத்தையே சச்சின் கேலி செய்துவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.