ஆஸ்ட்ரேலிய துவக்க வீரரான மேத்யூ ஹெய்டனின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது. சமீபமாக அவரது ஆட்டம் மோசத்திலிருந்து மிக மோசம் என்பதாக கீழிறங்கியுள்ளது. மேலும் ஆஸ்ட்ரேலியா தன் சொந்த மண்ணில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருப்பதால் அணியில் பல வீரர்களின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, சைமன்ட்ஸ், பிரட் லீ ஆகியோரது இடங்கள் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளன. மற்றவர்கள் மீண்டும் உள் நாட்டு கிரிக்கெட்டில் திறமைகளை நிரூபித்து ஆஸ்ட்ரேலிய அணிக்கு திரும்பும் வாய்ப்பிருந்தாலும், மேத்யூ ஹெய்டனுக்கு கதவுகள் திறக்காது என்றே ஆஸ்ட்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருதுகின்றனர்.மேத்யூ ஹெய்டன் விளையாடிய கடைசி 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களையே எடுத்துள்ளார், இரண்டும் இந்தியாவிற்கு எதிரானது. கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் 313 ரன்களை 22.35 என்ற சராசரியில் ஹெய்டன் எடுத்துள்ளார்.பெங்களூர் டெஸ்ட் தொடங்கி இன்று முடிந்த மெல்போர்ன் டெஸ்ட் வரை அவர் அடித்த ரன்கள் விவரம் இதோ: 0, 13, 0, 29, 83, 16, 77, 8, 0, 24, 12, 4, 8, 23.15
இன்னிங்ஸ்களில் 3 பூஜ்ஜியங்கள், இரண்டு அரை சதங்கள். எதிரணி வீரர்களை மதிக்காமல் பேசுவதில் செலுத்திய கவனத்தை மேத்யூ ஹெய்டன் சரிந்து வரும் ஆட்டத்தை மேம்படுத்த செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.1994
ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆலன் போர்டர் தலைமை ஆஸ்ட்ரேலிய அணியில் முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழைந்த மேத்யூ ஹெய்டன் முதலில் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 261 ரன்களையே எடுத்து சொதப்பினார். இதில் ஓய்ந்து போன மேற்கிந்திய அணிக்கு எதிராக 125 ரன்களை எடுத்ததுதான் இவரது அப்போதைய அதிகபட்சம்.அதன் பிறகு 1997ஆம் ஆண்டு அதே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இவர் தனது அப்போதைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார். அதன் பிறகு கல்தா கொடுக்கப்பட்டார். ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடத் தெரியாதவர் என்று இவருக்கு முத்திரை குத்தப்பட்டது.
பிறகு 3 ஆண்டுகால உள் நாட்டு கிரிக்கெட் ஆட்டங்களுக்கு பிறகு ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்ட்ரேலிய அணிக்குள் ஹெய்டன் நுழைந்தார். அப்போதுதான் அவரது ஆட்டம் புகழ் பெற தொடங்கியது. ஆனால் மீண்டும் வந்த பிறகும் கூட 2001 ஆம் ஆண்டு இந்திய தொடர் வரை அவரது ஆட்டம் தடவலாகத்தான் இருந்தது.
ஆனால் அப்போதெல்லாம் ஆஸ்ட்ரேலிய அணி ஸ்டீவ் வாஹ் தலைமையில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்தது. கெப்ளர் வெசல்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி குரோனியேயிடம் கைமாறி குரேனியேவும் ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் சிக்கி தென் ஆப்பிரிக்க அணியும் சின்னா பின்னமாகிக் கொண்டிருந்த காலக் கட்டம். இங்கிலாந்து அணி 2006 ஆஷஸ் தொடருக்கு முன்பு பெரிய அச்சுறுத்தல் அணியாக இருந்திடவில்லை.
மேற்கிந்திய அணி முற்றிலும் சீரழிந்த காலத்தில் இருந்தது. இலங்கை, இந்தியா ஆகிய அணிகளே ஆஸ்ட்ரேலியாவிற்கு சவாலாக இருந்தது. இலங்கை ஒரு நாள் கிரிக்கெட்டிலும், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்ட்ரேலியாவிற்கு சவாலாக இருந்தது.
எனவே மேத்யூ ஹெய்டன் 2001ஆம் ஆண்டிற்கு பிறகு ஆடி வரும் ஆட்டமெல்லாம் அவ்வளவு பெரிய சவாலான பந்து வீச்சுகளுக்கு எதிராக அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எனவேதான் அவர் ஜாகீர் கான், இஷாந்த், ஹர்பஜன், நிடினி, டேல் ஸ்டெய்ன் போன்ற தரமான பந்து வீச்சுகளை இப்போது எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார். நடுவே ஆஷஸ் தொடரிலும், ஆண்ட்ரூ பிளின்டாஃப், சைமன் ஜோன்ஸ் ஆகியோரது ஸ்விங் பந்துகளிலும் ஹெய்டன் தனது ஆர்பாட்டமான திறமையை காண்பிக்க முடியவில்லை.கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு காலக்கட்டத்தில் பலமான தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 1997ஆம் ஆண்டு அணியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட மேத்யூ ஹெய்டன், 2000 ஆம் ஆண்டு மீண்டும் வரும்போது சில அணிகள் அரைகுறை வளர்ச்சியிலும், சில முன்னணி அணிகள் முற்றிலும் சரிந்துமோ இருந்தன. அணிகளின் பலவீனங்களை பயன்படுத்தி தன்னை ஒரு அபாயகரமான துவக்க வீரராக மாற்றிக் கொண்டார் ஹெய்டன். மீண்டும் பந்து வீச்சு பலமடையும் போது ஹெய்டன் வீழ்ச்சியடைகிறார். இப்படிப் பார்த்தோமானால், அவர் ஒரு மகோன்னத வீரரா என்ற கேள்வி எழ வேண்டும்.2008
ஆம் ஆண்டில் அவர் 10 டெஸ்ட்களை விளையாடி 32 ரன்கள் என்ற சராசரியுடன் 552 ரன்களை எடுத்துள்ளார்.இவரைப் போலவே 1995ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை மார்க் டெய்லரும் கடுமையாக திணறி வந்தார். இவரும் இந்த காலக்கட்டத்தில் 21 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை.ஆனால் ஹெய்டன் மேல் ஆஸ்ட்ரேலிய தேர்வுக்குழுவிற்கு இருக்கும் மரியாதைக்கு காரணம் அவர் எடுத்த சதங்களின் எண்ணிக்கையும், அவர் வைத்திருக்கும் சராசரியும் காரணமாக இருக்கலாம். 30 சதங்களை எடுத்துள்ள ஹெய்டன், 50.92 என்ற அபாரமான சராசரியை வைத்துள்ளார்.ஆனால் ஆஸ்ட்ரேலிய அணித் தேர்வுக்குழுவினர் கருணைக்கு பேர் போனவர்கள் அல்லர். ஆஸ்ட்ரேலியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான இயன் ஹீலியை எந்த வித மரியாதையும் இன்றி ஜிம்பாப்வே தொடருடன் கழற்றி விட்டனர் ஆஸ்ட்ரேலிய தேர்வுக்குழுவினர்.ஒருவரது சொந்தத் தோல்வி அணியின் தோல்வியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, சக பேட்ஸ்மென்களின் ஆட்டத்தையும் பாதிக்குமானால் ஆஸ்ட்ரேலிய தேர்வுக் குழு அதனை ஒரு போதும் பொறுத்து வந்ததாக வரலாறு இல்லை. ஹெய்டனின் ஆட்டம் தற்போது இத்தகைய சீரழிவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் எப்போது அவர் ஹர்பஜன் சிங்கை இலக்காக நிர்ணயித்து அவர் களையெடுக்கப்படவேண்டியவர் என்று கூறினாரோ, இஷாந்த் ஷர்மாவை குத்துச் சண்டை வளையத்தில் சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினாரோ அப்போது முதலே அவரது ஆட்டம் சீரழியத் தொடங்கியது.
ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் எதிரணியினரின் பலம், பலவீனம் என்று அதிகப் பிரசங்கியாக, மனோ நிலை விளையாட்டு என்ற பெயரில் குப்பை கருத்துக்களை வன்மையாக கூறத் தொடங்கியதிலிருந்து அவரது ஆட்டம் வீழ்ச்சியுறத் தொடங்கியது.
மாற்றான் தோட்டத்தில் மலரும் மலர்களை களைகள் என்று வர்ணிக்கத் தொடங்கிய ஹெய்டன் தனது தோட்டம் முள்காடாய் மாறிவிட்டதை கவனிக்க தவறி விட்டார்.
அடுத்து என்ன? தனது 10 ஹெக்டேர் பரப்பளவு வீட்டில் அமர்ந்து சுயசரிதை எழுத வேண்டியதுதான்!